முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரழந்த ஒசூர் தலைமைக்காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி - முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்கினார்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க முற்படும் போது கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஓசூர் நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி முனிலட்சுமியிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறி்ப்பு வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டம், யு.சிங்கிரிப்பள்ளி என்னும் இடத்தில் கடந்த 15-ம் தேதி நடந்த சங்கிலிப் பறிப்பு சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல்நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமைக் காவலர்கள் முனுசாமி, தனபால், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாரதிதாசன் நகர் அருகே செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களை பிடிக்கமுற்படும் போது, அவர்கள் கத்தியால் தாக்கியதில் ஓசூர் காவல் நிலைய தலைமைக்காவலர் முனுசாமி என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட 16.6.2016 அன்று உத்தரவிட்டிருந்தார். தற்போதுள்ள அரசு விதிமுறைகளின்படி 5 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டிருந்தாலும், கொள்ளையரைப் பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த முனுசாமி குடும்பத்தினருக்கு இது போதுமான நிவாரணம் ஆகாது எனக் கருதி முனுசாமியின் உயரிய தியாகத்தைக் கருத்தில் கொண்டு அன்னாரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், உயிரிழந்த முனுசாமி அவர்களின் மகள் செல்வி ரக்ஷனாவின் உயர் கல்விச்செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 20.6.2016 அன்று சட்டமன்றப் பேரவையில்அறிவித்தார்.

அதன்படி, உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 கோடி ரூபாய்க்கானகாசோலையை அவரது மனைவி முனிலட்சுமியிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி ஆறுதல் கூறினார்கள்.மேலும், எம்.பி.பி.எஸ் மருத்துவப் பட்டப் படிப்பிற்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ரக்ஷனாவின் மருத்துவக் கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு வெளியிட்ட அரசாணையினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ரக்ஷனாவிடம் வழங்கினார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் 1 கோடி ரூபாய்க்கான நிவாரண உதவித் தொகையை பெற்றுக்கொண்ட தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்தினர், நிவாரண உதவித் தொகை வழங்கியமைக்காகவும், மகளின் மருத்துவக் கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளதற்காகவும் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்