முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2019      ஊழல்
Image Unavailable

குமரி : கன்னியாகுமரியில் 5.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 22 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரா கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் லட்சணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வேத விற்பன்னர்களின் வேத மந்திரம் முழங்க பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேவஸ்தானம் சார்பில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் 5.5 ஏக்கர் நிலப்பரப்பில் 22 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான முறையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் கடந்த 21-ம் தேதி 40 அடி உயர கொடிமரம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டது. மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் யாக சாலை பூஜை நடத்தினர். அதனை தொடர்ந்து மூலஸ்தானத்தில் 7 அடி உயர வெங்கடாஜலபதி சுவாமி சிலையும், 3 அடி உயரத்தில் பத்மாவதி தாயார் சிலை, ஆண்டாள் சிலை மற்றும் கருட பகவான் சிலைகள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டன.

இந்த கோவிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது, முன்னதாக கொடி மர பிரதிஷ்டை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது, தொடர்ந்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து வந்து இருந்த வேத விற்பன்னர்களின் வேத மந்திரம் மற்றும் பாரம்பரிய இசை மேளங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

நான்கு மாட வீதிகளுடன் கட்டப்பட்ட இந்த கோவிலில் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம், கருட சேவை உள்ளிட்ட அனைத்து விழாக்களும் அதே நாளில் அதே நேரத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத் தக்கது. தினசரி காலை 4.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். விழாவையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து