முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானப்படை தாக்குதலை சந்தேகிப்பதா? எதிர்க்கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்- பிரதமர் மோடி ஆவேசம்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து சந்தேகம் எழுப்பிய காங்கிரஸ் கட்சிக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் புல்வாமா தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் முகாமை அழித்தது குறித்தும், அதில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார். அந்த பேட்டியில் சாம்பிட்ரோடா பேசுகையில், " மும்பையில் கூட தீவிரவாத தாக்குதல் நடந்தது. ஆனால், யாரும் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானை பழிசுமத்தவில்லை. சில தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஒட்டுமொத்த நாட்டையும் குறைகூறுவதை ஏற்க முடியாது.

வலிமையான அரசு என்று அடிக்கடி மோடி கூறுகிறார். ஜனநாயகத்துக்கு வலிமை என்பது அவசியமானது அல்ல. ஹிட்லர் கூட வலியான தலைவர்தான். அனைத்து சர்வாதிகாரிகளும் வலிமையானவர்கள்தான். சீனத் தலைவர்கூட வலிமையானவர்தான். ஆனால், இந்தியாவுக்கு தேவையா?.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட்டில் விமானப்படை நடத்திய தாக்குலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், சர்வதேச ஊடகங்கள் தாக்குதல் குறித்தும், 300 பேர் கொல்லப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்புகின்றன. எனக்கு அந்த தாக்குதல் குறித்து அதிகம் தெரியாது. இந்த தாக்குதல் இதற்கு முன் மும்பையில் கூட நடந்துள்ளது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் விமானங்களை அனுப்புவது சரியான அணுகுமுறை அல்ல " எனத் தெரிவித்திருந்தார்.

சாம்பிட்ரோடாவின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கள் பதிவிட்டார். அதில் அவர் கூறுகையில், " காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர், வழிகாட்டி பாகிஸ்தானின் தேசிய நாளை காங்கிரஸ் சார்பில் கொண்டாடத் தொடங்கியுள்ளார். இந்த ராணுவத்தின் செயல்பாட்டை அர்த்தமில்லாமல் ஆக்குகிறார் இது வெட்கக் கேடு.

காங்கிரஸ் கட்சியின் வாரிசு தீவிரவாதத்துக்கு பதில் அளிக்க விருப்பமில்லை. ஆனால், இது புதுஇந்தியா, தீவிரவாதிகள் புரிந்து கொள்ளும் வகையில், அவர்கள் மொழியில்தான் பதில் அளிக்கும்.எதிர்க்கட்சிகள் நம்முடைய ராணுவ வீரர்களை மீண்டும், மீண்டும் வார்த்தைகளால் புண்படுத்தி வருகிறார்கள். நான் என்னுடைய இந்திய சகோதரர்களுக்கு கூறுவதெல்லாம், எதிர்க்கட்சித் தலைவர்கள் விடும் அறிக்கைகளை கேள்வி கேளுங்கள்.

நான் எதிர்க்கட்சிகளுக்கு கூறுகிறேன், 130 கோடி இந்தியர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள், உங்களின் இந்த பேச்சுக்களையும், செயல்பாடுகளையும் மறக்கமாட்டார்கள். நம்முடைய வீரர்களுக்கு துணையாக இந்தியா துணை நிற்கும்’’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து