முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      விளையாட்டு
Fleming-2024-04-28

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு அரங்கேறிய 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முன்னதாக, போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி கூறியதாவது,

சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்சின் சாதனை நன்றாகவே இருக்கிறது ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலமாக இருக்கிறது. கடந்த சில ஆட்டத்தில் பனித்துளி தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததாக கருதுகிறேன். பனியின் தாக்கம் சி.எஸ்.கே. பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தது. லக்னோவுக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் நேர்த்தியுடன் வீச இயலவில்லை.ஜடேஜா கடந்த சில ஆண்டுகளாக பின் வரிசையில் ஆடி வருகிறார். தற்போது 4-வது வீரராக ஆடி வருகிறார். ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்.ரகானே நன்றாக விளையாடக் கூடியவர் ஒரு சில ஆட்டத்தை வைத்து முடிவு செய்துவிடக் கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடராஜனுக்கு முரளிதரன் ஆதரவு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 46வது லீக் போட்டியில் சென்னை  மற்றம் ஐதராபாத் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி  சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்த ஐதராபாத் அணியும், லக்னோ அணியிடம் தோல்வியடைந்த சென்னை அணியும், தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் களம் கண்டது.இந்நிலையில், ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்படுவரா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிக விக்கெட்டுகளை அவர் எடுக்கும்பொழுது மட்டும் அவரை பற்றி பேசுகிறீர்கள். நடராஜன் நன்றாக விளையாடும் பொழுது நினைவில் வைத்துக்கொள்வர். அதன் பின்னர் அமைதியாகி விடுவர். கடந்த 5 ஆண்டுகளாக நடராஜன் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆனால் அவர் கவனிக்கப்படவில்லை. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இடம் பெறுவாரா என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது அது இந்திய அணியின் தேர்வர்கள் கையில் உள்ளது. ஆனால் என்னைப் பொருத்தவரை உலகக்கோப்பக்கான இந்திய அணியில் விளையாட நடராஜன் தகுதியானவர் என்று கருதுகிறேன். கடந்த ஐபிஎல் தொடரில் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டதால் சரியாக விளையாட முடியவில்லை. இந்த சீசனில் நடராஜன் நன்றாக விளையாடி வருகிறார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டி-20 விக்கெட் கீப்பர் தேர்வு

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரிடம் கடுமையான போட்டி காணப்படுகிறது. இந்நிலையில், தம்மை பொறுத்த வரை சஞ்சு சாம்சன்தான் இந்தியாவுக்காக விளையாடத் தகுதியான முதல் விக்கெட் கீப்பர் என்று நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். 

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நம்பர் 1 இடத்தில் சஞ்சு சாம்சன். ஏனெனில் நல்ல பார்மில் இருக்கும் அவரிடம் இப்போது நல்ல வித்தியாசம் தெரிகிறது. அதேபோல இந்தியாவுக்கு பேக்-அப் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அல்லது 4, 5-வது இடத்தில் விளையாடுவதற்கு ஒருவர் தேவைப்பட்டால் கே.எல். ராகுலை தேர்ந்தெடுக்கலாம். அவரும் நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால் நான் சாம்சனை முதலாவதாக தேர்ந்தெடுப்பேன். அவரைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் இருப்பார். காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள அவரை நீங்கள் தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ஸ்பெசலிஸ்ட் வீரராக பார்க்கிறீர்களா? அவருடைய பார்ம் சற்று தடுமாற்றமாக இருந்தாலும் சோதனைகளில் தேர்ச்சி பெற்று வருகிறார். எனவே இந்த 3 வீரர்களையும் நீங்கள் கணக்கில் வைக்கலாம். ஒருவேளை பி.சி.சி.ஐ. தண்டனை கொடுக்காமல் போயிருந்தால் நான் இஷான் கிஷனையும் தேர்வில் வைத்திருப்பேன்" என்று கூறினார்.

சாம்சனுக்கு பீட்டர்சன் ஆதரவு

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரிடம் கடுமையான போட்டி காணப்படுகிறது.இந்நிலையில் தாமாக இருந்தால் சஞ்சு சாம்சனை முதல் ஆளாக டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்ந்தெடுப்பேன் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சஞ்சு சாம்சன் செல்ல வேண்டும். இன்னும் சில வாரங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கும் இந்திய அணியின் விமானத்தில் அவர் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் ரன் எடுக்கும் விதம் மற்றும் பேட்டிங் செய்யும் சூழ்நிலை சிறப்பாக இருக்கிறது. எனவே நான் தேர்வாளராக இருந்தால் எனது முதல் தேர்வுகளில் அவர் ஒருவராக இருப்பார்" என்று கூறினார்.

துருவ் ஜூரலுக்கு பாராட்டு

முன்னதாக கடந்த வருடம் ராஜஸ்தான் அணியில் கிடைத்த வாய்ப்பில் அசத்திய துருவ் ஜூரல் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ராஞ்சியில் நடைபெற்ற 4-வது போட்டியில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை அற்புதமாக விளையாடி காப்பாற்றிய அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதேபோல கடைசி போட்டியிலும் சிறப்பாக விளையாடிய அவர் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்வதற்கு உதவினார்.

அதன் காரணமாக அடுத்த எம்.எஸ். டோனியாக உருவாகும் வழியில் ஜூரல் இருப்பதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியிருந்தார். அதே பார்மில் தற்போது நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் அசத்தும் துருவ் ஜூரல் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்கம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "இந்த ஜூரல் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்க நகை. தற்போது அவர் சிறப்பான வருங்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். சீரியஸ் நண்பா" என்று பதிவிட்டுள்ளார்.

இஷான் கிஷனுக்கு அபராதம் 

ஐ.பி.எல் தொடரில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 257 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இஷான் கிஷனுக்கு எதனால் அபராதம் விதிக்கப்பட்டது? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து