முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      ஆன்மிகம்
Sabarimala 2023-11-17

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில்  உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதனால் அங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 

இதனை தொடர்ந்து பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வரும் முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோர் இந்த முன்பதிவை பயன்படுத்தி வந்தனர். 

இதற்கிடையில் சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவும் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த 2 முறைகளால் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் காணப்பட்டது. 

இதனால் தரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது. இது குறித்து கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. 

கடந்த சீசனில் உடனடி முன்பதிவு மூலம் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். இதனால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என வெளியான தகவல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் உடனடி தரிசன முன்பதிவு முறையை ரத்து செய்ய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இனி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சீசன் காலங்களில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட 10 இடங்களில் செயல்பட்டு வந்த உடனடி முன்பதிவு கவுண்டர்கள் விரைவில் மூடப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இதன் மூலம் சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முன்பதிவை உறுதி செய்து கொள்ளலாம்.  கூட்டம் முடிந்ததும் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறுகையில், 

சபரிமலையில் இனி வரும் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும். 

பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப்கார் அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் அறிக்கை வருகிற 23-ம் தேதி ஐகோர்ட்டில் சமர்பிக்கப்படும். கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் ரோப் கார் பணிகள் தொடங்கப்படும்.  

முதல் கட்டமாக அப்பம், அரவணைக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும்,அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்கும் ரோப் கார் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து