முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

புதன்கிழமை, 8 மே 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத, அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் எதையும் நிறைவேற்றாத இந்த  அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின், தான் நடத்துவது சொல்லாட்சியல்ல, செயலாட்சி என்று கூறியிருக்கிறார். 

கடந்த 36 மாதங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறியுள்ளது.  ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க. அரசு மின்கட்டண உயர்வு, வீட்டுவரி மற்றும் சொத்துவரி உயர்வு,  போன்ற பல வரி உயர்வுகளை தமிழக மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது. 

தமிழகத்தில் அ.தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் சட்டத்தின் மாட்சிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க. ஆளும்போதெல்லாம் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். 

3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்களை கடனாளிகளாக ஆக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை.  கடந்த 36 மாதங்களாக எந்த ஒரு புது திட்டங்களும் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை.  அதுமட்டுமல்ல, எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வந்த பல மக்கள் நலத் திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன. பல திட்டங்கள் மூடுவிழா செய்யப்பட்டன. 

தற்போது தமிழகத்தில் நடப்பது சொல்லாட்சியுமல்ல, செயலாட்சியுமல்ல. மாறாக தி.மு.க. ஆட்சி செயலற்ற ஆட்சி, பயனற்ற ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி என்பதை தமிழக மக்கள் விரைவில் நிரூபிப்பார்கள். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து