முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீடு - அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.30 - சில்லரை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் கண்டித்து வரும் நிலையில் இது தொடர்பாக நேற்று டெல்லியில் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. காரணம் இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதனால் பிரதமர் கூட்டிய இந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ்மிஸ்ரா கூறுகையில், அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அது வாபஸாகும் வரை பாராளுமன்றத்தை செயல்பட அனுமதிக்க மாட்டோம். ஆனால் அரசாங்கமோ இதுபற்றி யோசிக்க மேலும் அவகாசம் கேட்கிறது என்று தெரிவித்தார். பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான கீர்த்தி ஆசாத் கூறுகையில் பாராளுமன்றத்தை நடத்த வேண்டும் என்ற அக்கறை ஆர்வம் அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை. மத்திய அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும். பாராளுமன்றம் செயல்படவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது செயல்படவே வேண்டாம் என்று அரசே நினைக்கிறது. பாராளுமன்றத்தை நடத்துவதில் உண்மையில் அவர்களுக்குத்தான் அக்கறையில்லை என்று காட்டமாகவே தெரிவித்தார் கீர்த்தி ஆசாத். எது எப்படியோ அன்னிய முதலீடு தொடர்பாக பிரதமர் கூட்டிய ஆலோசனைக் கூட்டம் நேற்று தோல்வியில் முடிந்தது. நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன்சிங் இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகே இந்த கூட்டம் கூட்டப்பட்டது. ஆனாலும் கூட்டத்தில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை பல்வேறு தலைவர்களும் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா, இது கோடிக்கணக்கான வணிகர்களை பாதிக்கும் எனவே தமிழ்நாட்டில் அனுமதிக்கவே மாட்டோம் என்று ஆணித்தரமாக கூறிவிட்டார். இதேபோல உ.பி.முதல்வர் மாயாவதியும் இதை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். மத்திய அரசின் இந்த முடிவு ராகுல்காந்தியின் வெளிநாட்டு நண்பர்களுக்குத்தான் உதவும் என்றும் அவர் காட்டமாக கூறினார். 

இதேபோல் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, சமாஜ்வாடி தலைவர்களில் ஒருவரான அகிலேஷ்யாதவ் போன்றவர்களும் இதை எதிர்த்துள்ளனர். பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான உமாபாரதியும் இதை எதிர்த்துள்ளார். அரசு தனது முடிவை திரும்பப் பெறாவிட்டால் நான் கடைகளுக்கு தீவைப்பேன் என்றும் அவர் ஒரு படிமேலே போய் கூறியுள்ளார். உ.பி., ம.பி., குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், ஒரிசா போன்ற பல்வேறு மாநிலங்களும் சில்லரை வணிகத்தில் அன்னிய வணிகத்தை கடுமையாக எதிர்க்கின்றன. 

டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மட்டுமே இந்த முடிவை ஆதரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்