முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,மார்ச்.18 - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வழக்கமாக மே மாதத்தில்தான் நடைபெறும். ஆனால் இம்முறை ஏப்ரல் மாதமே தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 13-ம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் தேர்தல் ஆணையம் தேதியை மாற்ற மறுத்துவிட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி அடுத்தமாதம் தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி பணிகளை தொடங்கின. கிட்டத்தட்ட எல்லா தரப்பிலும் கூட்டணி அமைக்கும் பணியும் தொகுதி பங்கீட்டு பணியும் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்றுமுன்தினம் 160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதேநாளில் தனது சுற்றுப்பயண திட்டத்தையும் அறிவித்தார். அதன்படி இன்று மதுரையில் ஜெயலலிதாவின் பிரசாரம் தொடங்குவதாக இருந்தது. மதுரை, முதுகுளத்தூர், திண்டுக்கல், தேனி, திருச்சி போன்ற தமிழ்நாட்டில் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஏப்ரல் 10-ம் தேதி அவரது பிரசாரம் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அவரது சுற்றுப்பயணம் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாததால் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுகிறது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு ஜெயலலிதாவின் ஒப்புதலோடு தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யும் பணி தொடங்குகிறது. வருகிற 26-ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். 28-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அனைத்து கட்சியினரும் தயாராகி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்