முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக்கின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ராஜினாமா

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 22 - சாதிக்பாட்சாவின் உடலை  பிரேத பரிசோதனை செய்து பின்பு பரபரப்பான பேட்டியளித்த டாக்டர் டெக்கால், திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிரடியாக உண்மைகளை கூறியதால் மிரட்டப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் சிக்கியதும் இந்த ஊழலில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பல ஆயிரம் கோடி கைமாறியதும் திடுக்கிட வைத்த விஷயங்கள். இந்த ஊழலை ஒட்டி அரசியல் தரகர் நீரா ராடியா, கனிமொழி மற்ற பிரபலங்கள் பேசி டேப் ஆதாரம் வெளியே வந்து கலக்கியது. ராசா மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. ஊழல் ஸ்பெக்ட்ரம் பணத்தை பல்வேறு வகைகளில் ராசாவும், ராசாவின் நெருங்கிய கூட்டாளிகளும் பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் பல்வேறு முதலீடுகளில் பதுக்கியதும் தெரிய வந்தது. கருணாநிதியின் கலைஞர் டி.வி.க்கும் 220 கோடி ரூபாய் முறைகேடாக பெறப்பட்டதும் ஸ்பெக்ட்ரம் பணமே என்ற கருத்து பரவலாக வந்தது. இதையொட்டி ராசாவின் கூட்டாளிகள் சாகித் பல்வா, முரானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

சென்னையில் ராசாவின் நண்பரும், பினாமியுமான கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் அதிபர் சாதிக்பாட்சாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. முறைகேடாக முதலீடு செய்யப்பட்டு ரூ.600 கோடி பற்றியும், ராசாவின் தொடர்புகள் பற்றியும் சி.பி.ஐ. சாதிக்பாட்சாவை விசாரித்து வருகிறது. வோல்டாஸ் நிலத்தை வாங்கிய விவகாரத்திலும், கலைஞர் டி.வி. விவகாரத்திலும் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் மொரிஷியல், மலேசியா உட்பட வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட விவகாரங்களிலும் சாதிக்பாட்சா முக்கிய சாட்சியாக இருப்பார் என்று கூறப்பட்டது. 

இதனிடையே சாதிக்பாட்சா தனது நிலையை சி.பி.ஐ.க்கு விளக்கியதாகவும், தனது குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனையின் பேரில் அப்ரூவராக மாற முடிவு எடுத்ததாகவும் கூறப்பட்டது. இதனிடையே கடந்த 16-ம் தேதி திடீரென்று மர்மமான முறையில் தனது வீட்டில் சாதிக்பாட்சா இறந்து கிடந்தார். அவரது உடலை வந்து எடுப்பதற்கு முன் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு  ஆயிரம் விளக்கில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்புலன்சில் வரும் மருத்துவ அதிகாரி சாதிக்பாட்சாவை சோதனை செய்தபோதே அவர் இறந்தது தெரிந்தும் ஏன் உடலை தனியார் மருத்துவமனைக்கு  எடுத்துச் சென்றார்கள் என்பதும், இறந்து போன சாதிக்பாட்சா பிரேதத்தை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பாமல் தனியார் மருத்துவமனை ஏன் அனுமதித்து கொண்டது என்பதும், பின்பு பிரேத பரிசோதனை செய்யப்படாத உடலை தடயவியல் நிபுணர்கள் சோதிக்கும் முன்பே அழகாக வெள்ளைத் துணியில் முகத்தையும் மூடி ஏன் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் என்பது கேள்விக்குறியான விஷயம். 

சாதிக்பாட்சாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது வீடியோ மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்  என்று கேட்டுக் கொண்டதன் பேரில் மறுதினம் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை தலைமை மருத்துவர் டாக்டர் டெக்கால், டாக்டர் ராஜலட்சுமி மற்றும் தடயவியல் துறை தலைவர் தலைமையில் பிரேத பரிசோதனை 3 மணி நேரம் நடைபெற்றது. பிரேத பரிசோதனை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் டெக்கால், சாதிக்பாட்சா மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததால் அவர் தூக்கு மாட்டியதால் இறந்தாரா? இறந்த பின் தூக்கு மாட்டினார்களா? என்பது பற்றி தாம் எதுவும் கூற முடியாது என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். ஏற்கனவே சாதிக்பாட்சாவின் மரணத்தில் ஏகப்பட்ட அவிழாத முடிச்சுகள் உள்ள நிலையில் டாக்டரின் இந்த பேட்டி பெரும் சந்தேகத்தை கிளப்பியது. ஒரு ஆள்  தூக்குப் போட்டால்  குரல் வளை உடைந்து விடும், கழுத்தெலும்பும் முறியலாம். ஆனால் பிரேத பரிசோதனை டாக்டர் தூக்கில் தொங்கியதால் மரணம் என்று கூறாதது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. 

மேலும் டெகஸ்கா பத்திரிகைக்கு டாக்டர் டெக்கால் அளித்த பேட்டி மேலும் பரபரப்பை  உண்டு பண்ணியது. ஒரு உடலை போலீசார் கொண்டு வந்தனர். அது சாதிக்பாட்சா உடல்தான் என்பது எனக்கு தெரியாது என்று கூறினார். இதே கருத்தை பெயர் கூற விரும்பாத அப்பல்லோ மருத்துவரும் கூறினார். இதனால் இந்த பிரச்சினை மர்மமாகவே உள்ளது. 

இந்த சூழ்நிலையில் டாக்டர் டெக்கால் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிரடியாக அவர் சில விபரங்களை கூறியதால் பாதிக்கப்பட்ட சக்தி வாய்ந்தவர்கள்  அவரை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தனது ராஜினாமா குறித்து பெருத்த சிரமங்களுக்கிடையே டாக்டரை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு  கேட்டபோது,  தான் ஒரு மாதம் முன்பே ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டதாகவும், தான் வரும் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதால் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறியுள்ளார். 

டாக்டர் டெக்காலுக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவரது மனைவியும் ஒரு டாக்டர். இவரது சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை ஆகும். அதிரடியாக டாக்டரின் அறிவிப்புகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தர்ம சங்கடத்தையும், தலைவலியையும் ஏற்படுத்தியதால் டாக்டர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்