முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு: டெல்லி துணை முதல்வரின் வீடு, உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      இந்தியா
Manish-Sisodia 2022-08-19

மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 21 இடங்களில் நேற்று சிபிஐ சோதனை நடந்தது. இதற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் நேற்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மனிஷ் சிசோடியா வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. 7 மாநிலங்களில் மொத்தம் 20 இடங்களில் நேற்று இந்த சோதனை நடைபெற்றது. சிசோடியாவின் வீடு உட்பட மொத்தம் 21 இடங்களில் சிபிஐ சோதனை நடந்தது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான விதிமீறல் புகாரை அடுத்து, இந்தச் சோதனை நடந்தது. டெல்லி அரசின் முன்னாள் கலால் ஆணையர் கோபிகிருஷ்ணாவின் டாமன் மற்றும் டையூ இல்லத்திலும் சோதனை நடந்தது.

சோதனையை அடுத்து மணீஷ் சிசோடியா பகிர்ந்த டுவீட்டில், "சிபிஐ எனது வீட்டில் சோதனை செய்கிறது. அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். எனக்கு எதிராக எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த மாத (ஜூலை) தொடக்கத்தில், டெல்லி தலைமைச் செயலர் பதிவு செய்த புகாரில் ஜிஎன்சிடிடி சட்டம் 1991, தொழில் பரிவர்த்தனை விதி (டிஓபிஆர்)-1993, டெல்லி உற்பத்தி வரி சட்டம் -2009, டெல்லி உற்பத்தி வரி 2010 ஆகியன முற்றிலுமாக மீறப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.

உற்பத்தி வரித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முறையற்ற வகையில் மதுபான லைசென்ஸ் வழங்குவதில் சலுகைகள் காட்டியதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

லைசென்ஸ் வழங்குவதில் புதிய நடைமுறை மூலம் மதுபான விற்பனை டெல்லி அரசிடமிருந்து கைமாறி நான்கு கார்ப்பரேஷன் வசம் சென்றது. இந்த நான்கு கார்ப்பரேஷன் பகுதியில் மொத்த மது விற்பனையில் 50 சதவீத விற்பனை நடைபெறுகிறது. இவை அனைத்தும் தனியார் வசம் விடப்பட்டது. இந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பரிந்துரைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிபிஐ ரெய்டு சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் நேற்று நடந்தது.

சிபிஐ ரெய்டு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லி மாடல் கல்வியை பாராட்டி, அதற்கு உழைத்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் புகைப்படம் அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாளான நியூயார்க் டைமிஸில் வெளிவந்துள்ளது. இந்த நேரத்தில் அவர் வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கு நாங்கள் சிபிஐ-யை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மனிஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனிஷ் சிசோடியா வீட்டின் முன் குவிந்த ஆம் ஆத்மியினர் சிபிஐ, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து