முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதியில் மனு தாக்கல் தொடங்கியது : முதல் நாளில் 4 சுயேச்சைகள் மனுத்தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      தமிழகம்
Erode 2023 01 31

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான நேற்று சுயேச்சைகள் 4 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள மாநகராட்சி பிரதான கட்டடத்தில், ஆணையர் அறையில் காலை வேட்பு மனுத்தாக்கல் செவ்வாய்க்கிழமை துவங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் கே.சிவகுமார் வேட்பு மனுக்களை பெற்றார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதால் மாநகராட்சி பிரதான கட்டடத்தின் நுழைவு வாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அவ்வளாகத்தில் உள்ள அலுவலகம், வங்கி உள்ளிட்ட பணிக்கு வருவோர், வேட்பாளர்கள், வேட்பு மனு பெற வந்தவர்கள் என பணி நிமித்தமானவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மனுத்தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கும் என்ற போதிலும், வேட்பு மனு தாக்கல் செய்ய காலை 10 மணிக்கே சிலர் வந்தனர். 

நுழைவு பகுதியில் தேர்தல் பணி அலுவலர்கள் வேட்பு மனுத்தாக்கலுக்கு வந்தவர்களின் மனுவை பெற்று மனு, ஆவணங்களை சரி பார்த்தனர். எஸ்சி, எஸ்.டி., வேட்பாளர்களுக்கு ரூ.5,000, மற்றவர்களுக்கு ரூ.10,000 கட்டணம் பெறப்பட்டது. வேட்புமனுவை முழுமையாக பரிசீலித்த பிறகு தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் (65) முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்த சுய தொழில் செய்து வரும் நூர்முகம்மது(63) என்பவர் காலணிகளை கோர்த்து மாலை அணிந்து வந்தார். மஞ்சள் துண்டை தோளில் போட்டு, பச்சை துண்டை தலையில் கட்டி இருந்தார். மக்களுக்கு நாயாய் உழைப்பேன், காலணி போல் தேய்வேன் என்பதை உணர்த்தும் வகையில் காலணி மாலை அணிந்து வந்தாகவும், இதுவரை 41 முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ்(42) என்பவர் காந்தி போல உடையணிந்து தராசுடன் வந்து மனுத்தாக்கல் செய்தார். 10 ரூபாய் நாணயமாக 10,000 ரூபாயை கொண்டு வந்து தேர்தல் கட்டணம் செலுத்தினார். மனு மற்றும் ஆவண குறைபாட்டால் மனு ஏற்கப்படவில்லை. மீண்டும் சிறிது நேரத்தில் வேட்பு மனுவை சரி செய்து தாக்கல் செய்தார். இதுவரை 10 முறை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேவராயன்பாளையத்தை சேர்ந்த ராமு மனைவி தனலட்சுமி(41) என்பவர் மனுத்தாக்கல் செய்தார். மாலை 3 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தபோது 4 பேர் மட்டும் மனுத்தாக்கல் செய்தனர். நால்வரும் சுயேட்சைகள். மேலும் 6 பேர் வேட்பு மனு ஆவணத்தில் குறைபாடு காரணமாக தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து