முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, காங்கிரஸ் கட்சி கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் இளங்கோவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காங்கிரசிலிருந்து ஜி.கே.வாசன் பிரிந்து சென்ற பிறகு அந்த இடத்துக்கு வந்தவர் விஜய் இளஞ்செழியன். இவருக்கும் காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். ஒருமுறை ராகுல் காந்தி பங்கேற்ற பொதுகூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளஞ்செழியனை ஈ.வி.கே.எஸ் அலட்சியமாக பேச அது தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பானது. இப்படி ஈ.வி.கே.எஸ் கை ஓங்கி இருந்ததால் சத்திய மூர்த்தி பவன் பக்கமே விஜய் இளஞ்செழியனோ இளைஞர் அணி ஆட்களோ தலையை காட்டாமல் இருந்தனர். இளைஞர் அணியினருக்கு என்று தனி அறையும் சத்திய மூர்த்தி பவனில் இல்லை.

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு இளங்கோவன் ஓரங்கட்டப்பட்டார். இன்றைய சூழ்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்பதால் நேற்று சத்திய மூர்த்தி பவனுக்குள் நுழைந்த விஜய் இளஞ்செழியன் தலைமையிலான இளைஞர் காங்கிரசார் கோபண்ணா அறையை கைப்பற்ற வந்தனர்.

அப்போது அங்கிருந்த சிரஞ்சீவி, செல்வம் ஆகியோர் அவர்களை சமாதானப்படுத்தி முறைப்படி அனுமதி கேளுங்கள் என்று அறிவுறுத்தினர். அப்போது விஷயம் அறிந்து அங்கு வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விஜய் இளஞ்செழியன் உள்ளிட்ட இளைஞர் காங்கிரசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  பின்னர் அங்கிருந்து கோபமாக புறப்பட்டு சென்றார். இதை அங்கு வந்திருந்த இளைஞர் காங்கிரசார் சிலர் ரகசியமாக செல்போனிலும் படம் பிடித்து வைத்து கொண்டார்கள். இந்நிலையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் இளஞ்செழியன் ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதில் பலர் முன்னிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேவலமாக திட்டி, உன் வீட்டில் வந்து வெட்டுகிறேண்டா என்று திட்டியதாகவும், கோபண்ணா உள்ளிட்டோர் வெளியில் வா தீர்த்து கட்டி விடுவோம் என்று கூறியதாக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதையே புகாராக அண்ணாசாலை போலீசில் அளிக்க அண்ணாசாலை போலீசார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கோபண்ணா, ரங்கபாஷ்யம், கடல் தமிழ்வாணன், பொன் மனோகர், சீனிவாச மூர்த்தி, மதுசூதனன் உள்ளிட்டோர் மீது பிரிவு 143(கும்பலாக கூடுதல்), 352, 506(2)(ஆயுதத்தால் கொலை செய்வேன் என மிரட்டல்) கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பிரிவு 506(2) கொலை மிரட்டல் பிரிவு ஆகும். இது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்