முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஊராட்சி செயலாளர்கள் பணி ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணியில் ஊராட்சி செயலாளர்களின் பணி குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில்  கிராம ஊராட்சி செயலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்  குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- மாவட்ட நிர்வாகத்தின் மூலம் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய பணிகளில் கிராம ஊராட்சி செயலர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மைக் காவலர்களை முறையாக பயன்படுத்தி வீடுகள் தோறும் குப்பைகளை பெற்று அதனை தரம் பிரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்திட வேண்டும். வாரந்தோறும்; வியாழக்கிழமைகளில் தங்களது ஊராட்சிக்குட்பட்ட கல்வி நிறுவனங்கள், தனியார்  நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஏடிஸ்  வகை கொசுக்கள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு அந்தந்த  நிர்வாகத்திற்குட்பட்ட இடங்களில் ஏடிஸ் வகை கொசுக்கள் இல்லை  என்பதற்கான சான்று பெற்றிட வேண்டும்.
 பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவு குளோரினேசன் செய்து வழங்கிட வேண்டும். குடிநீர் தொட்டிகளை போதிய கால இடைவெளியில் முறையாக சுத்தம் செய்திட வேண்டும். இது தவிர ஒவ்வொரு கிராமத்திலும் சுகாதாரக்  குழுவினர் வீடுவீடாக சென்று லார்வா மற்றும் கொசு முட்டைகள் அழிப்பு பணியை செய்யும் நாளன்று மாலை கண்டிப்பாக புகைமருந்து  அடித்தல் வேண்டும். குப்பை கொட்டுவதற்கென அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள் தவிர கண்ட இடங்களில் குப்பையை கொட்டுபவர்கள் மீது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்திட வேண்டும்.
 மேலும் பயனற்ற வகையில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட பண்டபாத்திரங்கள், பழைய டயர் ட்யூப்கள், உடைந்த வாகன உதிரிபாகங்கள், பிளாஸ்டிக் பானைகள் போன்ற பொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் இவைகளை திறந்தவெளியில் சேகரித்து வைப்பதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக கூடிய குடோனாக உள்ளது. இது போன்ற இடங்களை கண்டறிந்து, சேகரிக்கும் பொருட்களில் மழைநீர் தேங்காத வண்ணம்  மேற்கூரை வசதியுடன் கூடிய பாதுகாப்பான கட்டமைப்புக்குள் வைத்துக்கொள்வதை உறுதிசெய்திட வேண்டும்.
 நீர்நிலைகளின் கரைகளின் வெளிப்புறத்திலும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு கட்டிடங்கள் மற்றும் இதர பிற பொது இடங்களில் ஆலம், அரசு, பூவரசு, முருங்கை போன்ற மரங்களின் கிளைகளை வெட்டி மீண்டும் பதியம் முறையில்  நடவு செய்திட நடவடிக்கை மேற்யொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் உதயகுமார் உட்பட அரசு அலுவலர்கள், அனைத்து கிராம ஊராட்சிகளின் செயலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து