முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் ரத்து - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட மானியம் பெண்குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் கடைசியானதாக இருப்பது ஹஜ் புனித பயணம் செல்வது. ஆண்டு தோறும் ஹஜ் பயணம் செல்ல மத்திய அரசின் மானியத்துடன் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்காக மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை மானியமாக அளித்து வருகிறது. சிறுபான்மை நலத்துறையின் சார்பில் ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில் 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டில் ரூ. 450 கோடி ஹஜ் பயணத்திற்கு மானியமாக அளிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஹஜ் பயணிகளுக்கு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாகவும், ரத்து செய்யப்பட்ட இந்த நிதியானது பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் ஹஜ் பயணம் சென்றால் ரூ.3.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை பணம் செலவாகும். இந்நிலையில் விமான பயணம் மேற்கொண்டால் மட்டுமே அதிக செலவு ஏற்படும் என்றும் கடல் வழியில் மெக்காவிற்கு பயணம் மேற்கொண்டால் அதிக செலவு ஏற்படாது என்றும் கூறியுள்ளார். இதற்காக சவுதி அரேபியா இந்தியாயிடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். 2012ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், சிறுபான்மை நலத்துறையின் பரிந்துரையின் பேரிலுமே மத்திய அரசு மானியத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து