எதிர்க்கட்சிகளின் கற்பனை குற்றச்சாட்டிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - முதல்வர் எடப்பாடி 'குட்டிக்கதை' கூறி ஆவேச பேச்சு

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      தமிழகம்
cm edapadi1 2018 10 17

சென்னை : எதிர்க்கட்சிகளின் கற்பனை குற்றச்சாட்டிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'குட்டிக்கதை' கூறி ஆவேச பேசினார்.

சென்னை தீவுத் திடலில் 45-வது  இந்திய சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஒரு குட்டிக் கதை கூறி எதிர்க்கட்சிகளை விமர்சித்தார். 

மதிக்காமல்...

ஒரு அடர்த்தியான காடு. அந்த காட்டில் நிறைய மிருகங்கள் வசித்து வந்தன. அந்த காட்டில் ஒரு பொந்தில் ஒரு முயல் ஒன்று வசித்து வந்தது. காட்டிலேயே இந்த முயல்தான் சற்று  படித்த முயல். எனவே தனக்குத்தான் எல்லாம் தெரியும். இவர்கள் எல்லாம் படிக்காத முட்டாள் என்ற நினைப்பில் யாரையும் மதிக்காது. இந்த முயல் மற்ற முயல்கள் போன்றதல்ல. எப்பொழுதும் அசாதாரண கற்பனையிலேயே மிதக்கும்,  நடக்காத காரியங்களை எல்லாம் நடந்து விட்டதாக கருதும். எந்த நேரமும் ஏதாவது சிந்தித்தப்படியே இருக்கும். இந்த முயல் ஒரு நாள் வெகுதூரம் ஓடிய களைப்பில் ஒரு பனை மரத்தடியில் கண்களை மூடிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவாறு  இருந்தது.

உயிருக்கு ஆபத்து...

அப்பொழுது ஒரு பனம் பழம் ஒன்று பொத்தென்று கீழே விழுந்தது. கண்களை முடியவாறு இருந்ததால்,  பனம் பழம் விழுந்ததை முயல் பார்க்கவில்லை. முயலின் சிந்தனை கலைந்தது. அது தன் ஆயுளில் இதுபோன்ற சத்தத்தை கேட்டதில்லை. உலகத்தை பற்றிய சிந்தனையில் இருந்ததால் ஒருவேளை  உலகம்தான் புரண்டு விழுந்து விட்டதோ என்று நினைத்தது. இதனை நினைத்தவுடன் அதன் உடல் நடுங்கியது. இனி இங்கிருந்தால் நமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று நினைத்தவாறு தலை தெறிக்க ஓடியது. 

சிங்கம் கேள்வி...

வேகமாக ஓடிய முயலை வழியிலுள்ள மிருகங்கள் பார்த்து ஏன் வேகமாக ஓடுகின்றாய்? என்று கேட்டன.  அதற்கு அந்த முயல், உலகம் விழுந்து விட்டது.  நாம் இங்கிருந்தால் ஆபத்து. அதனால் ஓடுகிறேன் என்றது.  இதனைக் கேட்ட மற்ற மிருகங்களும் ஓட ஆரம்பித்தன.  எல்லாம் சிங்கத்திடம் சென்று இது பற்றி தெரிவித்தன. உடனே சிங்கம் முயலைப் பார்த்து, நீ அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தாயா? என்று  கேட்டது.  நான் நல்ல வேளையாக கண்களை மூடிக் கொண்டிருந்தேன் என்றது முயல். எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது?அந்த இடத்தைக் காட்டு என்றது சிங்கம். உடனே முயல் தான் படுத்திருந்த பனைமரத்திற்கு அழைத்து சென்றது.  இந்த பனை மரத்தடியில் இருக்கும்போது தான் உலகம் விழுந்தததை பார்த்தேன், என்றது. 

பாடம் புகட்டுவார்கள்...

சிங்கம் அங்கே சுற்றும் முற்றும் பார்த்து அங்கே பனம் பழம் விழுந்திருந்ததை பார்த்தது.  தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்ளும் முயல், பனம் பழம் விழுந்ததை உலகம் விழுந்ததாக கற்பனை செய்துக் கொண்டு உங்களையே குழுப்பி விட்டது. உலகம் விழவில்லை  என்று சிங்கம் கூறியது.  உண்மையை விளக்கிய சிங்கம், முயலின் அகங்காரத்தை ஒழிக்கும் வகையில் உரிய தண்டனை வழங்கியது. முயல் போன்று, மக்களை குழப்புவதற்காக எதிர்கட்சிகள் கூறும் கற்பனை குற்றச்சாட்டுக்களுக்கு, சிங்கம் போல்  மக்கள்  தக்க பாடம் புகட்டுவார்கள்.  என்றார்.

பாராட்டுக்குரியது...

மேலும் அவர் பேசுகையில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை அம்மாவின் அரசு தடை செய்துள்ளது. இதற்கு பொது மக்களாகிய நீங்கள் அனைவரும்  ஆதரவு அளிப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த உயரிய  கொள்கைக்கு இந்தப் பொருட்காட்சியில் முக்கியத்துவம் அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது பாராட்டுக்குரியது.

விளையாட்டு சாதனங்கள்

இந்த பொருட்காட்சியில் துபாயில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான கட்டடத்தின் மாதிரி வடிவம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம்,  மேக கூட்டங்களை பிரதிபலிக்கும் மாதிரி ஆகிய சிறப்பு அம்சங்கள்  இடம் பெற்றுள்ளன.  இதுபோன்ற பயனுள்ள விஷயங்கள் மட்டுமின்றி, பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் இந்த பொருட்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  இங்குள்ள அண்ணா கலையரங்கத்தில் தினந்தோறும் நாட்டியம், நாடகம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டு சாதனங்கள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 

முன்னோடி மாநிலமாக...

மக்களின் மன மகிழ்வுக்கு மூலக் கூறாகவும், வேலை வாய்ப்பினையும், அன்னியச் செலாவணியையும் ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாவை மேம்படுத்துதல், தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, புதிய சுற்றுலா மையங்களை தெரிவு செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் அரசு செயல்படுத்தி வருவதால், சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆன்மீகம் மற்றும் பொழுதுபோக்கும் சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் அமையப் பெற்றுள்ளன. யுனஸ்கோவின்  உலக பாரம்பரிய சின்னங்கள் ஐந்து தமிழ்நாட்டில் உள்ளன.  ஆக மொத்தம் உலகின் பழமையான கலாச்சாரம், வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், பிரமிக்கத்தக்க கோயில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, மனதை வசீகரிக்கும் இயற்கைத் தோற்றங்கள், வனப்பகுதிகள் முதலியவை தமிழ்நாட்டில் உள்ளன.  சிறந்த சாலை வசதிகள் மற்றும் நான்கு பன்னாட்டு விமான நிலையங்கள் இங்கு அமைந்துள்ளன. 

தமிழகம் முதலிடம்

இதன்காரணமாக,  2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், உள்நாட்டு  மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.  மேலும், 2017-ம் ஆண்டில்  முனைப்பாக சந்தைப்படுத்தியதன் விளைவாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்து, தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேலும் 2017-ம் ஆண்டில் 34 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 48 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து