சாதி, மத, பேதங்களை களைந்து ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் - முதல்வர் எடப்பாடிஓணம் திருநாள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      தமிழகம்
cm edapadi 2019 08 12

சென்னை : அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றி மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து, ஒற்றுமையாக இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள ஓணம் பண்டிகை வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிட, திருமால் வாமன அவதாரம் எடுத்து, அச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை தானமாக கேட்க, அதற்கு மகாபலி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, பாதாள உலகிற்கு தள்ளினார். பாதாள உலகிற்கு செல்லும் முன்பு, ஆண்டுக்கு ஒருமுறை தன்னுடைய மக்களை காண  வேண்டும் என்ற மகாபலி சக்கரவர்த்தியின் வேண்டுதலை திருமால் ஏற்று அருள் புரிந்தார்.

அதன்படி, மகாபலி சக்கரவர்த்தி மக்களை காணவரும் தினமே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் பத்து நாட்களும், மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலங்களிட்டு, புதிய ஆடைகளை உடுத்தி, குடும்பத்தினருடன் ஓணம் விருந்துண்டு, ஆடல், பாடல், விளையாட்டு என்று மனமகிழ்வோடு மலையாள மக்கள் இப்பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள். இந்த இனிய நாளில், அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றி மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து, ஒற்றுமையாக இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து