முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைதேர்தல் நடைபெறவிருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது - அ.தி.மு.க. வினர் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பு

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வரும் 21-ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் தற்போது களைகட்ட தொடங்கி உள்ளது. அங்கு வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைதேர்தல் வருகிற 21-ம் தேதி நடைபெறுகிறது. நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் களத்தில்  உள்ளனர். அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். மேலும் 19 சுயேட்சை வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தை  தொடங்கி விட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சார களத்தில் குதித்துள்ளனர். வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

முதல்வர் பிரச்சாரம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வரும் 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வரும் 15, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நாங்குநேரி தொகுதியில் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே. ராஜூ, விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, காமராஜ், பாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, சரோஜா, வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோரும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வரும் 9, 10 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத், மாநில தலைவர் கே. எஸ். அழகிரி ஆகியோர் தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில்..

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ் செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 14, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதே போல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் 13,14, 17 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதை தொடர்ந்து மீண்டும் 18,19 ஆகிய தேதிகளில் அவர் பிரச்சாரம் செய்கிறார். 2 தொகுதிகளிலும் தற்போது இடைதேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதே போல் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் ரங்கசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதே போல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்னாள் முதல்வர் நாராயணசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த 3 தொகுதிகளில் வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து