ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின்படி 32 லட்சம் விவசாயிகளுக்கு 1,727 கோடி நிதி உதவி: தமிழக அரசு தகவல்

ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் 31.72 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. ஆயிரத்து 1,727.14 கோடி மூன்று கட்டமாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் - உழவன் செயலி மூலம் பயனாளிகள் பதிவு தமிழக வேளாண் பெருமக்களின் வசதிக்காக முதல்வரின் உழவன் செயலி எனும் கைபேசி செயலி சென்ற ஆண்டில் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வேளாண் பெருமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் பல்வேறு தகவல்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இதுவரை, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் இச்செயலியினை பதிவிறக்கம் செய்து பயனடைந்து வருகின்றனர்.
உழவன் செயலி மூலம் மேலும் பல சேவைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், தற்போது, பிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின்கீழ், மத்திய அரசினால் பராமரிக்கப்பட்டு வரும் பி.எம். கிசான் வலைதளத்தில் தகுதியான விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்து இத்திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு தமிழக வேளாண்மைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதாவது, பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. வருவாய் மற்றும் வேளாண்மை துறைகள் மூலமாக கணக்கெடுக்கப்பட்டு, இத்திட்டத்தில் இதுவரை, சுமார் 34.46 லட்சம் தகுதியான விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன் புள்ளி விவரங்கள், மத்திய அரசு இணையதளத்தில் மூன்று கட்டமாக சரிபார்க்கப்பட்டு 31.72 லட்சம் பயனாளிகளுக்கு இதுவரை மூன்று தவணைகளாக ரூபாய் 1,727.14 கோடி நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கான நிதி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு, மத்திய அரசின் பி.எம். கிசான் வலைதளத்தில் தகுதியான விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்து திட்ட பலன்களை எளிதாக பெறுவதற்கான வாய்ப்பினை தமிழக வேளாண்மைத்துறை உழவன் செயலியில் ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, உழவன் செயலியில் பயனாளி முன்பதிவு சேவை எனும் பக்கத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் உழவன் செயலியில், பயனாளி முன்பதிவு சேவையில் பி.எம். கிசான் திட்டத்தை தேர்வு செய்து, தகுதியான விவசாயிகள் தங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் அட்டையில் உள்ளவாறு, விவசாயிகள் தங்கள் பெயரை மாற்றி கொள்ளலாம். ஆதார் எண், வங்கிக்கணக்கு எண் அல்லது கைபேசி எண்ணை உள்ளீடு செய்தால், விவசாயிகள் இத்திட்டத்தில் தங்களது விண்ணப்பத்தின் நிலைப்பாட்டினை அறிந்து கொள்ளலாம். உழவன் செயலியை ஆண்டிராய்டு கைபேசியில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐபோனில் ஆப் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்தி்க்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.