முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ்: சீன எல்லைகளை மூடக்கோரி ஹாங்காங்கில் மருத்துவர்கள் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதால் அதன் எல்லைகளை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹாங்காங்கில் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. சீனாவுக்கு வெளியே அந்நாட்டின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தன்னாட்சி நகரமான ஹாங்காங்கில் இந்த வைரசுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே போல் பிலிப்பைன்சிலும் இந்த வைரசுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சீனாவுக்கு வெளியே இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல் சீனாவுக்கு வெளியே 180 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீனாவின் வுகான் நகரில் இருந்து ஹாங்காங் வந்த 39 வயது நிரம்பிய நபர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து சீனாவுடனான எல்லையை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையுடன் நேற்று ஹாங்காங்கில் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவுடனான சாலைவழி மற்றும் கடல்வழி எல்லைகள் மூடப்படாததால் அங்கிருந்து வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் ஹாங்காங் நகருக்குள் சுலபமாக நுழைகின்றனர். இதனால் வைரஸ் ஹாங்காங்கிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சீனாவுடனான எல்லைகள் உடனடியாக மூடப்படாவிட்டால் வைரஸ் பாதிப்பு அதிகமாகி பலி எண்ணிக்கை உயரக்கூடும். ஆகவே ஹாங்காங் நிர்வாகம் சீனாவுடனான எல்லைகளை எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் ஹாங்காங்கில் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தால் நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையில், ஹாங்காங் - சீனா இடையேயான எல்லைகள் மூடப்படாது என ஹாங்காங் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் போராட்டம் தொடரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து