முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      இந்தியா
Modi-Rahul 2024-04-10

புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் புகார்...

பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிகளின் புகார் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் விளக்கம் கேட்டு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரில், பிரதமரின் பேச்சு பிரிவினையை தூண்டுவதாக, தவறானதாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிவைப்பதாக இருப்பதாகக் கூறியிருந்தது.

பொறுப்பை ஏற்க...

இந்த நிலையில்தான் இந்த புகாரின் அடிப்படையில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று தேர்தல் விதிமுறைகளை மீறிய புகார் ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் தனது உத்தரவில், “வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பிரச்சார நடத்தைக்கு அரசியல் கட்சிகள்தான் முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது. 

கார்கே - ஜே.பி.நட்டா....

முதல்கட்டமாக பாஜகவின் புகார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், காங்கிரஸின் புகார் பாஜக தலைவர் ஜே.பி நட்டாவுக்கும் உத்தரவு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து பரஸ்பர புகாரின் மீது தற்போது விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க. புகார்...

நாட்டில் வறுமை அதிகரிப்பு குறித்து ராகுல் காந்தி தவறான கூற்றை கூறி வருகிறார். மேலும், தேர்தல் சூழலை சீர்குலைப்பதற்காக மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் நாட்டில் வடக்கு-தெற்கு பிரிவினையை ராகுல் காந்தி உருவாக்கி வருகிறார் என்று கடந்த திங்கள்கிழமை பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் தான் தற்போது ராகுல் காந்தியும் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து