முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      தமிழகம்
sun-2023-05-01

சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 28ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 5 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் நேற்று 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதில்,  அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி பாரான்ஹீட் வெப்பமானது பதிவாகி உள்ளது. அதேபோல் சென்னை மீனம்பாக்கம் 101.66 டிகிரி பாரான்ஹீட், கோயம்பத்தூர் 101.84 டிகிரி பாரான்ஹீட், தர்மபுரி 105.26 டிகிரி பாரான்ஹீட், கரூர் பரமத்தி 105.8 டிகிரி பாரான்ஹீட், மதுரை நகரம் 101.12 டிகிரி பாரான்ஹீட், மதுரை விமான நிலையம் 103.28 டிகிரி பாரான்ஹீட், பாளையங்கோட்டை 100.58 டிகிரி பாரான்ஹீட், சேலம் 105.98 டிகிரி பாரான்ஹீட், தஞ்சாவூர் 102.2 டிகிரி பாரான்ஹீட், திருப்பத்தூர் 106.52 டிகிரி பாரான்ஹீட், திருச்சிராப்பள்ளி 104.9 டிகிரி பாரான்ஹீட், திருத்தணி 105.08 டிகிரி பாரான்ஹீட், வேலூர் 106.88 டிகிரி பாரான்ஹீட் என வெப்பமானது பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து