முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      இந்தியா
JEE 2023 06 18

புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

நாட்டில் உள்ள 23 இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) என்.ஐ.டி.யில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. என்.ஐ.டி.யில் சேர ஜே.இ.இ. முதன்மை தேர்வில் பங்கேற்பதும், ஐ.ஐ.டி. யில் சேர 2-ம் கட்ட ஜே.இ.இ. உயர்நிலை (அட்வான்ஸ்ட்) தேர்வில் பங்கேற்பதும் அவசியமாகும்.

இரு தாள்கள் அடங்கிய ஜே.இ.இ.முதன்மைத் தேர்வு இரு பதிப்புகளாக நடத்தப்படுகிறது. இரண்டு பதிப்பு தேர்வுகளுக்கு பிறகு அவ்விரு மதிப்பெண்களில் சிறந்ததை கருத்தில் கொண்டு தேர்வர்களின் தர வரிசை வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதல் பதிப்பு தேர்வு ஜனவரி-பிப்ரவரியில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இந்த மாதத்தில் நடந்த இரண்டாம் பதிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 10 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 56 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தெலுங்கானாவை சேர்ந்த 15 மாணவர்கள், மராட்டியம் மற்றும் ஆந்திராவில் இருந்து தலா 7 மாணவர்கள் முழு மதிப் பெண் பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. முதலிடம் பெற்ற 56 பேரில் 40 பேர் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள். ஓ.பி.சி. பிரிவில் 10 பேர் மற்றும் ஜென் - இ.டபில்யூ.எஸ் பிரிவில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த யாரும் முழு மதிப்பெண்களை பெற முடியவில்லை. 

இத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 மாணவர்கள் 3 ஆண்டு காலம் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொள்கையின்படி இரண்டு தேர்வு மதிப்பெண்களின் சிறந்ததை கருத்தில் கொண்டு மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகின்றன. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில் தெலுங்கானா மாநிலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முன்னிலையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து