முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை  எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும். 

இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பிற்கு, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. எனவே வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து