முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறைக்கு 2 வீரர்கள் பலி: உறுதியான நடவடிக்கை எடுப்போம்: மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      இந்தியா
Manipur-RPF-2024-04-28

இம்பால், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடந்த தாக்குதல் துரதிர்ஷ்டம் வாய்ந்தது என தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர், மணிப்பூர் வன்முறை தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 2-வது கட்ட மக்களவை தேர்தல் கடந்த 3 நாட்களுக்கு முன் அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் செயலியின்படி, 2-வது கட்ட மக்களவை தேர்தலில் மணிப்பூரில் 78.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன என தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலையில், மணிப்பூரின் காங்கோபி மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களின் எல்லை பகுதியில் சினம் கோம் பகுதியில் இரு குழுவினர் இடையே திடீரென துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த சம்பவத்தில், கிராமத்தில் தன்னார்வலராக செயல்பட்டு வந்த நபர் ஒருவர் காணாமல் போனார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த அவர் லைஷ்ராம் பிரேம் என அடையாளம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புக்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் 128-வது பட்டாலியனை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குகி பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 2 துணை ராணுவ படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

வீரர்கள் உயிரிழப்புக்கு, மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளார். குற்றவாளிகளை தாமதம் இன்றி பிடிப்போம். அவர்கள் நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள் என உறுதி அளித்து உள்ளார். உயிரிழந்தவர்களில் துணை காவல் ஆய்வாளர் என். சர்கார் மற்றும் தலைமை கான்ஸ்டபிளான அரூப் சைனி என இருவரும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

எங்களுடைய வீரர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப்., அசாம் ரைபிள்ஸ் வீரர்கள், கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். இந்த சம்பவம் துரதிர்ஷ்டம் வாய்ந்தது. அவர்கள் எங்களுடைய மக்களை பாதுகாக்க வந்தவர்கள் என்று சிங் கூறியுள்ளார். தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர் என கூறிய அவர், 11 வாக்கு மையங்களிலேயே மறுதேர்தல் நடைபெற்றது என்றும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து