முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணினி, விவசாய ஆசிரியர்களுக்கு இடமாறுதல்: முதல்முறையாக கலந்தாய்வு மூலம் அரசு ஏற்பாடு

திங்கட்கிழமை, 5 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்களுக்கும், விவசாய ஆசிரியர்களுக்கும் முதல்முறையாக கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல் அளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு விவசாயம் மற்றும், கணினி பாடங்களை சொல்லிக் கொடுப்பதற்காக விவசாய ஆசிரியர்களும் (தொழிற் கல்வி பயிற்றுனர்-வேளாண்மை), கணினி ஆசிரியர் களும் (கணினி பயிற்றுநர்) கடந்த 2008-ம் ஆண்டு முதல்முறையாக நியமிக்கப்பட்டனர். 2008-ம் ஆண்டிலும் அதைத்தொடர்ந்தும் 1,880 கணினி ஆசிரியர்களும், 300 விவசாய ஆசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு முறையில் ஆண்டுதோறும் பொது இடமாறுதல் அளிக்கப்பட்டு வருகிறது. இடமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் பணிமூப்பு, முன்னுரிமை போன்றவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு காலியிடம் இருக்கும் விருப்பமான பள்ளியை தேர்வுசெய்து கொள்ளலாம். ஆனால், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் கணினி ஆசிரியர்களுக்கும், விவசாய ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு முறையிலான இடமாறுதல் வசதி இல்லாமல் இருந்து வந்தது.

வேலைக்குத் தேர்வானபோது பணி ஒதுக்கீடு பெற்ற தொலைதூர பகுதிகளில் பணியாற்றி வந்தனர். திருமணம் முடிந்த ஆசிரியைகள் நிலைதான் பரிதாபம். வேலை பார்க்கும் இடம் எங்கேயோ ஒரு பகுதி. குடும்பம் இருப்பதோ எங்கேயோ ஒரு இடத்தில். வீட்டிலிருந்து 100 கிலோ மீட்டர், 200 கி.மீ. தூரத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் ஏராளம்.அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் இதர ஆசிரியர்களைப் போன்று தங்களுக்கும் கலந்தாய்வு முறையில் பொது இடமாறுதல் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவந்தனர். இந்த நிலையில், மற்ற ஆசிரியர்களைப் போல கணினி ஆசிரியர்களுக்கும், விவசாய ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல், விருப்ப மாறுதல் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதற்கான அரசு உத்தரவை பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ளார்.அரசின் இந்த உத்தரவு மூலம் ஏறத்தாழ 1,800 கணினி ஆசிரியர்களும், 300 விவசாய ஆசிரியர்களும் பயன்பெறுவர். இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ஏ.அருள்ஜோதி, மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.பரசுராமன் ஆகியோர் கூறும்போது, “கடந்த 8 ஆண்டு காலமாக இடமாறுதலுக்கே வழியில்லாமல் இருந்து வந்தது. எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசின் இந்த அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. நடப்பு கல்வி ஆண்டிலேயே இடமாறுதல் வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்