முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. 44-வது ஆண்டு தொடக்க விழா: கோத்தகிரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு இன்று ஜெயலலிதா மரியாதை

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, அ.தி.மு.க.வின் 44-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கோத்தகிரி டானிங்டனில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மேலும், கட்சி கொடியை ஏற்றி வைப்பதுடன், சிறப்பு மலரையும் அவர் வெளியிடுகிறார்.

இதுதொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 43 ஆண்டுகள் நிறைவடைந்து, 17-10-2015 (இன்று) அன்று 44-வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு அன்று காலை 11.30 மணி அளவில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சி, டானிங்டனில் நிறுவப்பட்டுள்ள கட்சி நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியினை ஏற்றிவைத்து, ‘தொடக்க நாள் விழா சிறப்பு மலரை’ வெளியிட்டு இனிப்பு வழங்க உள்ளார்.இந்த நிகழ்ச்சியில், தலைமைக்கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. தொடங்கி 43 ஆண்டுகள் நிறைவடைந்து, 17-10-2015 அன்று 44-வது ஆண்டு தொடங்குவதை கொண்டாடும் வகையில், 18-10-2015 ஞாயிற்றுக்கிழமை முதல் 20-10-2015 செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் ‘‘அ.தி.மு.க. 44-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’’ கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்களும், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள். தலைமைக்கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் 17-10-2015 அன்று ஆங்காங்கே கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, கட்சியின் 44-வது ஆண்டு தொடக்க நாளை சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்