முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருப்பமனுக்களை பெற கால அவகாசம் மேலும் நீடிப்பு முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 3 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க சட்டசபைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கான விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய வரும் 6 ம்தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.முக. பொதுச்செயலாளரும், முதல்வருமான  ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் 20.1.2016 முதல் 3.2.2016 வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தேன்.

தற்போது கழக உடன் பிறப்புகள் பலரும் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தர வேண்டி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வருகின்ற 6.2.2016 (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை கழக உடன்பிறப்புகள் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர்  ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதற்கிடையில் நேற்று கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால் அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் பெருமளவில் குவிந்தனர். இதனால் அதிமுக அலுவலகமே நிரம்பி வழிந்தது. அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் வழியெங்கும் தொண்டர்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.  மாலை வரை  21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அதி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். அ.தி.மு.க.வில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான புதுமுகங்களும், பெண்களும் தேர்தலில் போட்டியிட விருப்பத்துடன் மனு கொடுத்துள்ளனர். நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் நிறையபேர் போட்டி போட்டு விருப்ப மனுக்களை பெற்றனர். முதல்வர்  ஜெயலலிதா பெயரில் நேற்றும் ஏராளமானவர்கள் விருப்ப மனுத்தாக்கல் செய்தபடி இருந்தனர்.  234 தொகுதிகளில் தனித்தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் முதல்வர்  ஜெயலலிதா போட்டியிட கோரி பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்  நேற்று மதியம் வரை சுமார் 800 பேர் விருப்ப மனு பெற்றனர்.

எனவே அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரத்தை இன்று எட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வரும் 6 ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்