முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். ‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ எனப் புகழப்படுகிறது, சென்னை மயிலாப்பூரில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கபாலீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம், அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்ட தலம், முருகப்பெருமான் சிக்கல் தலத்தைப் போல வேல் பெற்ற தலம், பிரம்மன் தன் ஆற்றலை திரும்பப் பெற்ற தலம், ராமன், சுக்ரன் வழிபட்டு பேறு பெற்ற கோவில், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தேவாரப் பதிகம் பாடல் பெற்ற 274 சிவஸ்தலங்களில் 257-வது கோவிலாகும். தொண்டை நாட்டுத் தலங்களில் இத்தலம் 24-வது திருத்தலமாகவும் அமைந்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த இந்த கோவில், திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் நிறைவடைந்து, இந்த ஆண்டு (2016) மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் (மார்ச்) 25-ம் தேதி பந்தக்கால் நடுவது, விக்னேஸ்வர பூஜை, கும்பாபிஷேக லக்ன பத்திரிகை வாசித்தல் ஆகியவையும் ஹோமங்கள் வாஸ்து சாந்தி பூஜை, ஆச்சாரியார்கள் பூஜையும் நடைபெற்றது. முதல்கால யாகசாலை பூஜைகள் 28-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம்  காலை 5.30 மணி வரை 12 கால யாக பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை 8 மணிக்கு யாகசாலையில் இருந்த கலசங்களை சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க கோவில் உட்புற பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.   பின்னர் சரியாக காலை 8.50 மணிக்கு அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முக மணி கொடி அசைக்க ராஜ கோபுரம், கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் விமானம், சிங்காரவேலர், விநாயகர் என 19 விமான கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கலசத்தில் உள்ள புனித நீரை சிவாச்சாரியார்கள் கும்பங்களில் ஊற்றி அபிஷேகம் செய்தார்கள். பின்னர் கும்பத்திற்கு தீப ஆராதனை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘‘கபாலீஸ்வரா கற்பாகாம்பாள் தாயே’’ ‘ஓம் நமச்சிவாயா சிவாய நம’ என பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பி கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். பக்தர்கள் மீது கும்பாபிஷேக தீர்த்தும் தௌிக்கப்பட்டது. ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பைப் மூலமாகவும் புனித தீர்த்தம் பக்தர்கள் மீது பீய்ச்சி அடிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண கோவிலின் 4 மாட வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

மாட வீதிகளில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பக்தர்கள் பார்ப்பதற்கு வசதியாக பெரிய எல்.இ.டி. டி.வி. வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலும் ஏராளமான பேர் நின்று கும்பாபிஷேகத்தை பார்த்தார்கள். முதியோர் வர பேட்டரி கார்கள்கும்பாபிஷேகத்தை காண வரும் முதியோருக்காக, வடக்கு மாடவீதி இந்தியன் வங்கி அருகில் இருந்து, கோவிலுக்கு வர இரண்டு பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன.

கோயிலை சுற்றி உள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இதனால் பக்தர்கள் சிரமமின்றி கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். பல்வேறு இடங்களில் பாதுகாப்பு தடுப்புக்களும் அமைக்கப்பட்டிருந்தது. நான்கு மாட வீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, 26 சிசிடிவி கேமிராக்கள் மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டனர். ஆங்காங்கே ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தையடுத்து கபாலீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேக நிகிழ்ச்சியில் பல்வேறு கோவில்களின் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், செயல் அலுவலர்கள் மற்றும்  ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல், அப்பல்லோ மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் ப்ரீதா ரெட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவிலின் இணை ஆணையர் காவேரி தலைமையில் பணியாளர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.கும்பாபிஷேகத்தை பார்க்க வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் மயிலாப்பூருக்கு இயக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்