முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயக்குமார் சந்திப்பு: : தமிழக மீனவர்கள் இனி தாக்கப்பட மாட்டார்கள் சுஷ்மா சுவராஜ் உறுதி

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மீனவர்கள் பிரச்சனை குறித்து நேற்று டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் தமிழக மீன்வத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழக மீனவர்கள் இனி தாக்கப்பட மாட்டார்கள் என சுஷ்மா உறுதியளித்தார்.

அமைச்சர்களுன் சந்திப்பு
தமிழக அமைச்சர்கள், நேற்று  டெல்லியில் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களை விரைவில் நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினர். தமிழகம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதை தடுப்பது குறித்தும், தமிழக மீனவர்கள் பாக். நீரிணையில் அமைதியான முறையில் மீன் பிடிக்க வழிவகை காண்பது குறித்தும், அப்போது மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும், கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அலகில் உற்பத்தியாகும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கே அளிக்க வேண்டும், சென்னை நகரில் புயல், வெள்ளம் பாதிப்பு ஏற்படாமல், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வசதியாக 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்
தமிழக நிதி மற்றும் மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மின்துறை அமைச்சர் தங்கமணி, வீட்டு வசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்  விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழு, டெல்லி சென்று, மத்திய அமைச்சர்களை நேற்று சந்தித்தது. அப்போது தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்கள் குறித்தும், நிதி ஒதுக்கீடு பற்றியும் தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தினர்.

சுஷ்மா உறுதி
தமிழக நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். பாரம்பரிய பாக் நீரிணைப் பகுதியில், தமிழக மீனவர்கள் சுதந்திரமாக எந்த இடையூறுமின்றி மீன்பிடிக்க வசதி செய்து தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழக மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்படமாட்டாது என அமைச்சர் ஜெயக்குமாரிடம், சுஷ்மா உறுதியளித்தார்.

தமிழகத்திற்கு ஒதுக்க ...
இதேபோல், மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலை, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.  அதன்படி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அலகுகளில் உற்பத்தியாகும் 2,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே ஒதுக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி வலியுறுத்தினார். மேலும் காற்றாலை உபரி மின்சாரத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு விற்க வசதியாக, பசுமை மின் வழித்தடம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வர்தா புயலால் சேதமடைந்த சென்னை மின்கட்டமைப்பை முற்றிலுமாக சீரமைக்க ஆயிரத்து 93 கோடியே 27 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், செய்யூர் மிக உய்ய அனல்மின் திட்டத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்