முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மொழிகள் அனைத்தையும் தேசிய மொழிகளாக அறிவிக்க மக்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 10 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இந்திய மொழிகள் அனைத்தையும் தேசிய மொழிகளாக அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் துணை சபாநாயகரும் அ.தி.மு.க மூத்த உறுப்பினருமான தம்பிதுரை வலியுறுத்தினார்.

மக்களவையில் நேற்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பவள விழா உரையில், தம்பிதுரை தமிழில் பேசத் தொடங்கினார். இதை புரிந்துகொள்ள முடியாமல் மற்ற மாநில உறுப்பினர்கள், ‘மொழியாக்கம் இல்லை’ எனக் கூச்சலிட்டனர்.

இதற்கு தம்பிதுரை, “மற்ற உறுப்பினர்களுக்கு எனது தமிழ் உரையின் மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை. தமிழில் பேச நான் உங்களிடம் (சபாநாயகரிடம்) அனுமதி பெற வேண்டியுள்ளது. தமிழ் உட்பட மற்ற அனைத்து மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு தானாகக் கிடைப்பதில்லை. எனவே நான் ஆங்கிலத்தில் உரையாற்ற கட்டயப்படுத்தப்படுகிறேன்” என்றார்.

இதற்கு சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், “முன்கூட்டியே தெரிவித்தால் கண்டிப்பாக உங்களுக்கு மொழிபெயர்ப்பு வசதி செய்யப்படும்” என்றார்.
பவள விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சில உறுதிமொழிகளை மக்கள் எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதை நாளேடுகளில் படித்ததாகவும், அதில் தானும் ஒரு விஷயத்தை சேர்க்க விரும்புவதாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது “நம் மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டுமே தவிர பிராந்திய மொழிகளாக அல்ல. தமிழ், தெலுங்கு, வங்கமொழி உட்பட நம் நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற உறுதிமொழியையும் அதில் சேர்க்க வேண்டும்” என்றார்.

காங்கிரஸுடன் திராவிட இயக்கத்திற்கு வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும் சுதந்திரப் போராட்டத்தில் தந்தை பெரியார் தலைமையில் திராவிட இயக்கம் தீவிரமாகப் பங்கேற்றதை தம்பிதுரை நினைவுகூர்ந்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு காந்தியாவதி என்று குறிப்பிட்ட தம்பிதுரை, தனது திருமணத்தில் அவர் கதர் ஆடை அணிய நிபந்தனை விதித்ததாகவும் கூறினார். 1857 சிப்பாய் கலகத்திற்கு முன் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை தம்பிதுரை விளக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து