முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி வாசீம் ஷா காஷ்மீரில் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

காஷ்மீர் : தெற்கு காஷ்மீரில் கடந்த ஆண்டு வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமானவர்களில் முக்கிய நபராக கருதப்படும் வாசீம் ஷா (23) நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் அவரது உதவியாளருடன் கொல்லப்பட்டார்.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டரான இவர் அபு ஒசாமா பாய் என்றும் அழைக்கப்பட்டார். தெற்கு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீதான பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர். இவரைப் பற்றிய தகவலுக்கு போலீஸார் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தனர். ஷோபியான் மாவட்டத்தின் ஹெஃப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவர் ‘டான் ஆப் ஹெஃப்’ என்றும் அழைக்கப்பட்டார். இவரது நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக கருதப்படும் லிட்டர் பகுதியில் இவர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலை சுற்றி வளைத்தனர். இதையடுத்து வாசீம் ஷா தனது பாதுகாவலரும் மற்றொரு தீவிரவாதியுமான நிசார் அகமது மீருடன் தப்பிச் செல்ல முயன்றார். எனினும் ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் அமைத்திருந்த வலுவான அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை. அப்போது நடந்த மோதலில் இவரும் கொல்லப்பட்டனர்.

ஷோபியான் மாவட்டத்தின் ஹெஃப்-ஷிர்மல் பகுதியைச் சேர்ந்த வாசீம் ஷா, நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். பழ வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள குல் முகம்மது ஷா என்பவரின் மகனான இவர் பள்ளிப் பருவத்திலேயே லஷ்கர் அமைப்பின் தீவிர ஆதரவாளராக மாறினார். கல்லூரிப் படிப்பை பாதியில் விட்ட இவர் கடந்த 2014-ல் லஷ்கர் அமைப்பில் இணைந்தார். லஷ்கர் அமைப்புக்கு புதிய ஆட்களையும் இவர் சேர்த்து வந்தார்.

புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த லிட்டர் பகுதியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட முதல் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும். இதில் வாசீம் ஷா கொல்லப்பட்டது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப் படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து