முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் 6 ஆயிரம் காவலர்கள் தேர்வு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 6 ஆயிரம் காவலர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்று சென்னையில் நேற்று காவலர் நியமன ஆணை வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பணி நியமன ஆணை

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 621 சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 46 காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையை சேர்ந்தவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மக்களால் நான், மக்களுக்காகவே நான்’’ என்று வாழ்ந்து தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி, தனது சிறந்த நிர்வாகத் திறமையால் இந்தியாவிலேயே தமிழ் நாட்டைமுதன்மை மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா. `அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தின் வழிகாட்டுதலின்பேரில் அம்மாவின் நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

சிறப்பான முறையில்...

தமிழ்நாடு காவல்துறை தனிப்பெருமையோடு சிறப்பாக பணியாற்றி வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரித்தும், குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரித்தும், நல்லிணக்கத்தை நிலைநாட்டியும், தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்தும், தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்கவும், தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இயற்கைப் பேரிடர் ஏற்படும் தருணங்களில் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பிற துறையினருடன் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

பணியிடம் நிரப்பு

சிறைத் துறையினரும் குற்றவாளிகளை நன்னடத்தை உடையவர்களாக மாற்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் இருக்கின்றனர். இருப்பினும், காவலர் எண்ணிக்கையை உயர்த்துவது மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதன் மூலம் இன்னும் சிறப்பான பாதுகாப்பை பொதுமக்களுக்கு கொடுக்க முடியும் என்ற நோக்கத்தில் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றீர்கள்.

காவலர்கள் தேர்வு

சீருடைப்பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஓர் தனி வாரியத்தை 1991-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா நவம்பர் மாதம் தொடங்கினார்கள். இது மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாகவும், முன்னோடியாகவும் இன்று வரை நம்மையெல்லாம் பெருமைப்படுத்திக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு வரை, ஒரு லட்சத்து இரண்டு ஆயிரத்து நானூற்று முப்பத்திரெண்டு சீருடைப் பணியாளர்களை இத்தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஆண்டு நிதிநிலைக்கூட்டத் தொடரில் நான், காவலர்கள் பணி நியமனம் குறித்து சட்டமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து, மிகக்குறுகிய காலத்திலேயே பதினைந்தாயிரத்து அறுநூற்று இருபத்தொன்று (15,621) நபர்கள் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2-ம் நிலை காவலர்

இவற்றில், ஆயுதப்படைக்கு ஆறாயிரத்து நான்கு (6004) இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், இரண்டாயிரத்து ஐநூற்றுஅறுபத்தி நான்கு (2564) இரண்டாம் நிலை பெண் காவலர்களும், தமிழக சிறப்புக் காவல் படைக்கு நாலாயிரத்து ஐநூற்று அறுபத்தேழு (4567) இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், ஐந்து (5) பெண் காவலர்களும் என மொத்தம் பதிமூன்றாயிரத்து நூற்று நாற்பது (13,140) இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விரைவில் தேர்வு

மேலும் சிறைத்துறைக்கு தொள்ளாயிரத்து ஐம்பத்தி நான்கு (954) இரண்டாம் நிலை ஜெயில் வார்டர்களும், முப்பத்தாறு (36) இரண்டாம் நிலைபெண் ஜெயில் வார்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ஆயிரத்து நானூற்று தொண்ணுற்று ஒன்று (1491) தீயணைப்பு வீரர்கள் எனமொத்தமாக பதினைந்தாயிரத்து அறுநூற்றி இருபத்தி ஒன்று (15,621) நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்பதையும் இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலமாக தமிழ்நாடு காவல் துறையில் காலி பணியிடங்களே இல்லை என்கிற உயரிய நிலையை உருவாக்கி தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பை இவ்வுலகே வியக்கும் வண்ணம் உயர்த்துவதே ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசின் நோக்கமாகும்.

பணியாற்ற வாய்ப்பு

இந்தியாவிலேயே முதன்முறையாக 1992-ம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையின் மொத்த எண்ணிக்கையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பெண் காவலர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமையைபெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுஎன்று சொன்னால் அது மிகையாகாது. இதனால் தமிழ்நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன. தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்வில் இது ஒரு பெருமைமிக்க தருணம் ஆகும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் லட்சியத்தின்படி, தமிழ்நாடு காவல்துறையில் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் பேணி, நமது காவல்துறையின் வரலாற்று பெருமையை நிலைநாட்ட வேண்டியகடமை உணர்வோடும், நடுநிலையோடும், தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டும். இப்படிப்பட்ட சிறப்புமிகு தமிழ்நாடு காவல்துறையில் உங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பெருமை அளிப்பதாகும்.

இதனை எந்நாளும் நினைவில் கொண்டுநீங்கள் உங்கள் பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செவ்வனே செய்ய வேண்டும். சீருடைப்பணியில் ஏராளமான சவால்களையும், பல்வேறு இடர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டிவரும்.

உங்கள் சொந்த இல்லம்

``ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்’’ என்ற எம்.ஜி.ஆர்.பாடல் வரிகளுக்கு ஏற்ப விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். மக்களுடைய குறைகளை கனிவுடனும், கவனத்துடனும், பணிவுடனும், பரிவுடனும் கேட்டு, நடுநிலையுடனும், நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும். இதுதான் உங்களுடைய தலையாய கடமை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அம்மாவின் அரசு உங்கள் சொந்த இல்லம் ’’திட்டத்தின் கீழ் சீருடைப் பணியாளர்களுக்கென வீடுகள்கட்டிக் கொடுத்து வருகிறது. சென்னை வண்டலூருக்கு அருகில் மேலக்கோட்டையூரில் வீடுகள் கட்டிக் கொடுத்தது போல, கீழக்கோட்டையூரிலும் வீடுகள் கட்டிக் கொடுக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதே போல, பிற மாவட்டங்களிலும் வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தன்னல மற்ற சேவை

பூவை பார்த்து ஒரு குழந்தை கேட்டது, உன்னை பறிக்கும் போது மலர்ந்த முகத்துடன் மணம் வீசுகிறாயே எப்படி என்று.... அதற்கு மலர் சொன்னது பறித்தவர் முகத்தில் தெரியும் சந்தோஷத்தை பார்த்து எனது வலியெல்லாம் மறந்து போகிறது என்று..... காவல் பணியும் அதுபோல தான், நேரம் காலம் கடந்து பல தருணங்களில் பாடுபட்டு உழைக்க வேண்டிய தன்னல மற்ற சேவை. ஆனால் அந்த உழைப்பால் மக்கள் பெரும் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை கண்முன்னே நிறுத்தி பார்க்கும்போது உங்களுக்குள் ஒரு பூரிப்பும், மிடுக்கும் நிச்சயம் ஏற்படும்.

இன்று பணி நியமனம் பெற்றுள்ள உங்கள் கடமைக் கரங்கள் எதிர்காலத்தில் பதக்கங்கள் பலகுவிக்கும் திறமைக்கரங்களாக திகழ வேண்டும் என உளமாற வாழ்த்துகிறேன். ஒளிவு மறைவின்றி, நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தி உங்களை எல்லாம் தேர்வு செய்த சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர், வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து