முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் ராமநாதபுரம் கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைநிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
 தமிழ்நாடு அரசு, படிப்படியாக பூரண மதுவிலக்கு என்ற நிலையினை அடைந்திடும் விதமாகவும், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றினால் ஏற்படும் தீமைகள் குறித்து  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும்,  தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில்; ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பாக மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைநிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை பேருந்துகளில் ஒட்டி,  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
 மேலும் இக்கலை குழுவினர் மது, கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை உட்கொள்வதனால் தனிமனிதனுக்கு உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் தீமைகள் குறித்து நாட்டுப்புறப்பாடல், கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளின் வாயிலாக பொதுமக்களுக்கு எளிமையாக புரிந்திடும் வகையில் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.  மேலும் இக்கலைக் குழுவானது மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று இவ்வாறான கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருமுனை பிரச்சாரங்கள் வாயிலாக மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 இந்நிகழ்ச்சியில்  ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், உதவி ஆணையர் (கலால்) எம்.அமிர்தலிங்கம்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, வட்டாட்சியர்கள் சண்முகசுந்தரம், தர்மர்  உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து