முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்ட பகுதிகளில் நில அதிர்வு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : சேலம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நேற்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி இருந்தது. பொதுமக்கள் இது போன்ற நில அதிர்வுகளை உணரும்பட்சத்தில் சமவெளிப் பகுதியில் பாதுகாப்பாக இருக்குமாறு சேலம் கலெக்டர் ரோஹினி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தின் மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, கமலாபுரம், மேச்சேரி, தாரமங்கலம், கன்னங்குறிச்சி, தீவட்டிப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை 7.50 மணியளவில் நிலஅதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவானதாக மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 2 நிமிடங்களுக்கு நீடித்த இந்த நில அதிர்வு காரணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலஅதிர்வு காரணமாக பாதிப்புகள் ஏற்படவில்லை.

இது போன்ற நிலநடுக்கம் உணரப்படும் நேரங்களில் பொதுமக்கள் பதட்டமின்றி இருக்கும்படியும், ஜன்னல், கண்ணாடி, கதவுகள், அலமாரிகள், பாலங்கள் மற்றும் விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றின் அருகே நிற்க வேண்டாம் என்றும், மின்தூக்கியை(லிப்ட்) உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் பாலங்கள், உயர் மின் அழுத்த கம்பிகள் அருகில் நிற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் நெருக்கமான கட்டிடங்களை தவிர்த்து சமவெளிப் பகுதியில் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் குறித்த தகவலுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்  1077- ஐ தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டி வரும் வேளையில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும்போது நில அதிர்வு ஏற்படுவதாக அப்பகுதியில் கூறப்படுகிறது. இதே போன்று தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம், நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியிலும், நாமக்கல் மற்றும் ஈரோடு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து