முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால சீசன் துவங்கியுள்ளதை முன்னிட்டு விடுமுறை நாட்களில் மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைத்திட சுற்றுலா பயணிகள் கோரிக்கை:

புதன்கிழமை, 12 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குளுகுளு சீசன் துவங்கியுள்ள நிலையில் விடுமுறை நாட்களில் மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயிலில் இடநெருக்கடியை தவிர்த்திடும் வகையில் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைத்திட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருவிகளின் சங்ககம்,தென்னகத்து ஸ்பா என்றெல்லாம் அழைக்கப்படும் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சிலநாட்களாக சீசன் துவங்கியுள்ளது.இந்நிலையில் குற்றாலத்தில் நிலவிடும் சீசனை அனுபவித்தபடி அருவிகளில் குளித்து மகிழ்ந்திட தசுற்றுலா பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.இவர்களில் பெரும்பான்மையானோர் வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் தங்களது குடும்பத்தினருடன் மதுரை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலில் சென்று திரும்புவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். ஆயினும் விடுமுறை நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயிலில் பெட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது.இதன் காரணமாக குற்றால இன்பச் சுற்றுலாவை அனுபவித்த பயணிகள் செங்கோட்டை பாசஞ்சர் ரயிலின் நெருக்கடியில் சிக்கி நரகவேதனையுடன் திரும்ப வேண்டியுள்ளது.
 செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு மாலை வேளையில் கிளம்பிடும் பாசஞ்சர் ரயிலில் குற்றால சீசனை அனுபவித்து திரும்பிடும் சுற்றுலா பயணிகள் படுகின்ற வேதனை சொல்லி மாளாத அளவில் உள்ளது.இந்த ரயில் செங்கோட்டையை விட்டு கிளம்பிடும் போதே முழுமையாக நிறைந்து விடுகிறது.மேலும் தென்காசியை இந்த ரயில் அடைந்திடும் போது அங்கு திரண்டு நிற்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறி படிக்கட்டுகள்,பெர்த்துகள் மற்றும் கழிவறைகள் என அனைத்து பகுதியையும் நிறைத்து மூச்சுவிட முடியாத நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர்.எனவே குற்றால சீசன் ரம்மியமாக துவங்கியுள்ள இந்த சமயத்தில் வார இறுதி நாட்களான வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் நிலவிடும் கூட்டநெரிசலை கருத்தில் கொண்டு மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயிலில் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைத்திட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து