முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபையில் இ -பட்ஜெட் தாக்கல்: எம்.எல்.ஏ.க்கள் இருக்கை முன்பு கணினி அமைக்கும் பணி நிறைவு

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: வரும் 13-ம் தேதி தமிழக சட்டசபையில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கையின் முன்பும் கணினி அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் வரும் 13-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதேபோல் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இவை இரண்டும் காகிதமில்லா பட்ஜெட்டாக கணினிமூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இ-பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை செயலகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கையின் முன்பும் கணினி அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை வாசிக்கும்போது, சட்டமன்ற உறுப்பினரின் முன்னால் வைக்கப்பட்டுள்ள கணினியின் மூலம் நிதிநிலை அறிக்கையை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கை மற்றும் துறைரீதியான மானியக் கோரிக்கையின் போதும் புத்தகமாக அச்சிட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. இதை தவிர்ப்பதற்காகவும், காகிதங்களின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்கலாம் என்பதற்காகவும், காகிதமில்லா பட்ஜெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ - பட்ஜெட்டை எப்படி அறிந்து கொள்வது என்பது குறித்து எம்.எல்.ஏ.க்களுக்கான பயிற்சி கலைவாணர் அரங்கில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து