முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரானால் மீள் தொற்றுக்கு மூன்று மடங்கு அதிக வாய்ப்பு : விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : உருமாறிய டெல்டாவைவிட ஒமைக்ரான் வைரஸால் மீள் தொற்று ஏற்பட மூன்று மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 

கொரோனா பாதித்தவர்களுக்கு 90 நாட்களுக்குப் பின்னர் மீள் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கும். அத்தகையோருக்கு டெல்டா திரிபைவிட ஒமைக்ரான் திரிபால் மீள் தொற்று ஏற்பட மூன்று மடங்கு அதிக வாய்ப்புள்ளது.  ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை என்னவென்பதைத் தெரிந்து கொள்ள நாம் இன்னும் 2 முதல் 3 வாரங்களுக்கு காத்திருக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு இன்னும் பல நாடுகள் தடுப்பூசி செலுத்தவில்லை. மிகக் குறைவான நாடுகளே அதுவும் குறைந்த அளவிலேயே தடுப்பூசியை செலுத்தியுள்ளன. அதனால் ஒமைக்ரானால் குழந்தைகளும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும் பாதிக்கப்படலாம். இருப்பினும் நாங்கள் உலக நாடுகளில் இருந்து இன்னும் அதிகமான தரவு வருவதற்காகக் காத்திருக்கிறோம்.

தடுப்பூசியைப் பொருத்தவரை நான் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தான் முடிவுகளை எடுக்க வேண்டும். நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது அதே கொரோனா வைரஸ்தான். அதனால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே போதுமானது தான்.

ஒருவேளை இந்த புதிய உருமாறிய கொரோனா வைரசுக்கு என்று பிரத்யேகமாக தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்றால், அதற்கு இப்போதைய தடுப்பூசிகளை எதிர்க்கும் ஆற்றல் ஒமைக்ரானுக்கு இருப்பது உறுதியாக வேண்டும்.  தடுப்பூசி தொடர்பாக அமெரிக்காவில் இருந்து மிகப்பெரிய தரவுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் பார்க்கும் போது தடுப்பூசிகள் கொரோனா உயிரிழப்புக்கு எதிராக கேடயமாக இருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. 

உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இதனை சரிசெய்யவே உலக சுகாதார அமைப்பு கோவேக்ஸ் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ள நமக்கு நிறைய அறிவியல் ஆதாரங்கள் தேவை. ஆகையால் உலக நாடுகள் தங்கள் நாட்டில் கண்டறியப்படும் உருமாறிய வைரஸ்கள் பற்றிய தகவலை துரிதமாக, வெளிப்படையாக எங்களுடன் பகிர வேண்டும். உலக நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு எட்டப்பட வேண்டும் என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து