முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் சட்டம் காலாவதியானது: ஆன்லைன் ரம்மியை ஒழிக்கவே நாங்கள் பாடுபட்டு வருகிறோம்: சட்டத்துரை அமைச்சர் ரகுபதி பேட்டி

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      தமிழகம்
Raghupati 2022 11 25

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை, ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நோய், அதை ஒழிக்கவே நாங்கள் பாடுபட்டு வருகிறோம் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இணைய வழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி, போகோ இவற்றை தடை செய்தல் ஒழுங்குமுறைபடுத்துதல் அவசரகால சட்டத்தின் கால வரையறை நவ. 27-ம் தேதியோடு முடிந்து விட்டது. அவசர சட்டத்திற்கு கவர்னர் ஏற்கனவே ஒப்புதல் தந்தார். அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கவர்னர் இந்த சட்டத்தில் சில சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் கவர்னருக்கு அனுப்பியது. கவர்னர் உடனே ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதை தெளிவுபடுத்த தான் தற்போது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

கவர்னருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் முதல் உரையிலேயே மிகத்தெளிவாக தமிழக அரசு விளக்கியுள்ளது. 99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி, போகோ, இணைய வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் இவைகள் ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. அதற்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அந்த கடமையை தான் தமிழக அரசு சட்டமாக இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. கவர்னர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம். காலதாமதம் ஏற்படுத்துவதற்கான அவசியம் கிடையாது. ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும்.

சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். கவர்னர் ஒப்புதல் அளித்த உடன் சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த முடியும் அதற்கு நாங்களும் தயாராக உள்ளோம். கவர்னர் கையெழுத்து போட்டு விட்டால் இதற்கு உயிர் வந்துவிடும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லக்கூடிய சூழ்நிலையில் இல்லை. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம். தற்போது வரை கவர்னரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. தற்போது அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும். அசம்பாவிதம் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதை பொதுமக்களிடமே விட்டு விடுகிறோம்.

கவர்னர் மீது வழக்கு போட முடியாது. கவர்னர் இந்த சட்டத்தில் கையொப்பம் இடவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அனைவருக்கும் தெரியும். கவர்னரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. கவர்னர் கேட்கும் கேள்விகளுக்கு தான் நாங்கள் பதில் கூற முடியும். தெளிவான பதில்களை நாங்கள் ஏற்கனவே கவர்னருக்கு கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து