முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா வீரருக்கு தடை

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      விளையாட்டு
Kolkata 2024-04-30

Source: provided

ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஐபிஎல் நடத்தை விதிமுறையில் படிநிலை ஒன்றின் கீழ் விதி 2.5-ஐ ராணா மீறியுள்ளார். அவர் தனது விதிமீறலை ஒப்புக் கொண்டு அதற்கான அபாராதத் தொகையை கட்ட சம்மதித்துள்ளார். படிநிலை ஒன்றில் வீரர் ஒருவர் விதிமீறலில் ஈடுபட்டால், நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வாலை ஆட்டமிழக்கச் செய்தபோதும், இதே விதிமீறலில் ஈடுபட்ட ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வருகிற மே 3 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாட ஹர்ஷித் ராணாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

___________________________________________________

மும்பை அணி குறித்து கிளார்க்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமை இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்டில் அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவார்களா என எனக்குத் தெரியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் நாம் வெளியில் பார்ப்பதைக் காட்டிலும் அணிக்குள் நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருப்பதாக நினைக்கிறேன். சிறந்த வீரர்கள் பலரை அணியில் வைத்துக் கொண்டு மும்பை அணி தொடர்ச்சியாக வெற்றி பெறத் தவறுகிறது.

அணியில் அவர்களுக்குள் ஒற்றுமையில்லை என நினைக்கிறேன். அந்த அணியில் ஏதோ ஒரு விஷயம் தவறாக இருக்கிறது. அவர்கள் ஒன்றாக இணைந்து அணியாக விளையாடவில்லை. தனிநபர்கள் சிறப்பாக செயல்பட்டால் மும்பை அணியால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற முடியும். ஆனால், இது போன்ற பெரிய தொடர்களை வெல்ல வேண்டுமென்றால் தனிநபரின் செயல்பாடுகளைக் காட்டிலும் ஒரு அணியாக ஒற்றுமையாக செயல்படுவது அவசியம் என நினைக்கிறேன் என்றார்.

___________________________________________________

அடுத்த சுற்றில் மெத்வதெவ் 

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றார். மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர், 6-1, 6-0 என, உள்நாட்டு வீராங்கனை சாரா சொரைப்ஸ் டோர்மோவை எளிதாக வீழ்த்தினார். அடுத்ததாக காலிறுதியில், பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயாவை சந்திக்கிறார் ஸ்வியாடெக். போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் மாயா, 6-4, 6-4 என்ற நேர் செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் மரியா சக்காரியை வென்று அவருக்கு அதிர்ச்சி அளித்தார். போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுர் 6-0, 6-4 என்ற செட்களில், 9-ஆம் இடத்திலிருந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை வெளியேற்றினார்.

உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-1, 6-7 (5/7), 6-4 என்ற செட்களில், அமெரிக்காவின் ராபின் மான்ட்காமெரியை போராடி வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளார். அதில் அவர், மற்றொரு அமெரிக்கரான டேனியல் காலின்ஸுடன் மோதுகிறார். 13-ஆம் இடத்திலிருக்கும் காலின்ஸ் முந்தைய சுற்றில் 3-6, 6-4, 6-1 என்ற கணக்கில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை சாய்த்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 5-7, 7-6 (7/4), 6-3 என்ற செட்களில், 25-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை வெளியேற்றினார். இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்திருக்கும் மெத்வதெவ், அதில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்லிக்கை சந்திக்கிறார். போட்டித்தரவரிசையில் 17-ஆவது இடத்திலிருக்கும் பப்லிக், 3-6, 7-6 (7/2), 6-4 என்ற செட்களில், 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பென் ஷெல்டனை வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து