முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      தமிழகம்
Okanagal 2023 08 18

Source: provided

சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். 

பருவ மழை பொய்த்து போனதாலும், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டுலு வழியாக செல்லக்கூடிய காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. 

இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்து வண்ணமாக இருந்தது. கடந்த சில நாட்காளக கோடை காலம் மற்றும் மழை இன்மையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 200 கனஅடியாக நீடித்து வந்தன.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மற்றும் அஞ்செட்டி, கேரட்டி, நாட்ரபாளையம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 500 கன அடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது.

படிப்படியாக மேலும் அதிகரித்து காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 800 கனஅடி அளவில் உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.  கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், மழை அளவு குறைந்ததாலும், ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் வறண்டு பாறைகளாக காட்சியளித்தன.

மேலும், மெயின் அருவியில் மட்டும் குறைந்த அளவிலான தண்ணீர் கொட்டியது. ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டன. மேலும் கடந்த சில நாட்களாக வீசிய கடும் வெப்ப அலை காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாவுக்காக வந்த பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க முடியாமல் சிறிதளவில் தண்ணீர் கொட்டிய மெயின் அருவியில் குளித்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன. ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிகளிலும், காவிரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் சீராக தண்ணீர் செல்வதால் அத்திமரத்துகடுவு பகுதியில் இருந்து ஊட்டமலை பரிசலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சவாரி செய்தனர். மேலும், ஓட்டல்கள், கடைவீதி, பரிசல் நிலையம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

தற்போது நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதாலும், கோடைகாலம் தொடங்கியதாலும் கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1500 கனஅடிக்கு மேல் வரும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து