முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவிகள்

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      தமிழகம்
10-th 2024-05-10

Source: provided

கமுதி : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பென் எடுத்து கமுதி மற்றும் திண்டுக்கல் மாணவிகள் 2 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளிகளான தர்மராஜ்- வசந்தி தம்பதியின் மூத்த மகளான காவியஜனனி(15). தந்தை திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வருகிறார். தாயார் வசந்தி கமுதியில் உள்ள பலசரக்கு கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார்.

மாணவி காவிய ஜனனி கமுதி ரஹ்மனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி காவிய ஜனனிக்கு பள்ளியின் கல்விச் சங்கத்தின் தலைவர் ஹாஜி வி.என்.எ.அப்துல்லா, நிர்வாகத் அலுவலர் அ.முஹம்மது இர்ஷாத், தாளாளர் ஆயிஷா பீவி, தலைமை ஆசிரியர் வி.என்.பாதுஷா, உதவி தலைமை ஆசிரியை சர்மிளா மற்றும் வகுப்பு ஆசிரியர்கள், பள்ளியின் அலுவலக பணியாளர்கள் மாணவ, மாணவிகள், பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

பொது தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க உறுதுணையாக இருந்த பெற்றோர், பள்ளி நிர்வாகம், தலமையாசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் 12-ம் வகுப்பில் இதே போன்று அதிக மதிப்பெண் எடுத்து, வருங்காலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆவதே எனது லட்சியம் என்று மாணவி காவிய ஜனனி தெரிவித்தார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மண்டவாடி புதூர் கிராமத்தை சேர்ந்த காவ்யாஸ்ரியா என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியில் ஆகிய 4 பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஒட்டன்சத்திரம் அக்ஷயா அகாடமி பள்ளியில் படித்த மாணவியான இவரது தந்தை கருப்புச்சாமி விவசாயி. தாய் ரஞ்சிதம் குடும்பத்தலைவியாக உள்ளார்.

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியை பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் இனிப்பு கொடுத்து வாழ்த்தினர். தனது வெற்றி குறித்து மாணவி கூறுகையில், சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன். குறிப்பாக 10-ம் வகுப்பு வந்தவுடன் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டேன். தினந்தோறும் பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனமுடன் படித்தாலே போதும். அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வேன்.

தினசரி பாடங்களை அன்று வீட்டிற்கு சென்றதும் படித்து முடித்துவிடுவேன். இதனால் எந்த சிறப்பு வகுப்பிற்கும் நான் செல்லவில்லை. எனது படிப்பிற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தனர். மேலும் தாளாளர் மலர்விழி செல்வி, ஆசிரியர்கள் ஆகியோர் ஊக்கமளித்து என்னை சிறந்த மாணவியாக உருவாக்கி உள்ளனர். எதிர்கால லட்சியம் என்பது ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கலெக்டர் ஆகவேண்டும் என்பதே ஆகும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து