முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலைகள் உடனடியாக மேம்படுத்தப்படும்: அமைச்சர்

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.30 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க நெடுஞ்சாலைத்துறை சாலைகளுக்கு இணையாக ஊராட்சி ஒன்றிய சாலைகளை உடனடியாக மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.நேற்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.சோமசுந்தரம் கேள்வி நேரத்தின் போது பேசியதாவது:-

வி.சோமசுந்தரம் (அ.தி.மு.க.) அனைத்து ஊராட்சி சாலைகளையும் தரம் உயர்த்தி அகலப்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா?

ப:அமைச்சர் கே.பி.முனுசாமி:

தமிழகத்தில் உள்ள ஊராட்சி சாலைகளில் மாவட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலை மற்றும் ஊராட்சிகளை இணைக்கும் சாலைகள் என பிரிக்கப்பட்டு இவற்றில் ஆண்டு ஒதுக்கீடு மற்றும் சாலையின் முக்கியத்துவம் ஆகியற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட சாலைகள் மட்டுமே தரம் உயர்த்திட திட்டமிடப்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலின் அடிப்படையில் தேவைக்கேற்ப சாலைகள் 6.00 மீ வரை அகலப்படுத்தப்படுகின்றன. தற்போது ஊராட்சி சாலைகளை அகலப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் பேசியதாவது:-

முதலமைச்சர் ஜெயலலிதா நெடுஞ்சாலைகளுக்கு இணையாக ஊராட்சி சாலைகள் மேம்படுத்தப்படும் என்ற நல்ல செய்தியினை அறிவித்திருக்கிறார். ஊராட்சி சாலைகளை எல்லாம் செப்பனிடப்படும் என்று மக்களெல்லாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த வாய்ப்பை நிறைவேற்றித் தருவதற்கு அறிவித்திருக்கிற இந்த நல்ல வேளையில், மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கிளாங்குளம், சாலையும், கவசக்கோட்டை சாலை கள்ளிக்குடியிலிருந்து சோளம்பட்டி செல்லக்கூடிய சாலை, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலக்கோட்டை சாஸ்திரிபுரம் செல்லக்கூடியச சாலை, ஊராட்சி ஒன்றிய சாலை மிகப்பெரிய போக்குவரத்து நிறைந்த சாலைகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. முதலமைச்சர் அறிவித்தவாறு, அமைச்சர் இந்த ஆண்டே அந்த ஊராட்சி சாலைகளைப் புதுப்பித்துத் தருவார்களா?

பதில்: அமைச்சர் கே.பி.முனுசாமி முதல்வர் ஜெயலலிதா எப்போதுமே எதார்த்த நிலையிலேயும், உண்மை நிலையிலேயும் ஆட்சி செய்கின்றவர்கள். நான் சொன்னதாக ஒரு கருத்தை இங்கே சொன்னார்கள். நெடுஞ்சாலைத்துறை சாலைகளுக்கு இணையாக ஊராட்சி ஒன்றியச்சாலைகளை மேம்படுத்த வேண்டுமென்று சொன்னார். நெடுஞ்சாலைத்துறை சாலைகளுக்கென்று ஒரு தனி அளவுகோல் இருக்கின்றது.

ஊராட்சி ஒன்றியச்சாலைகளுக்கென்று ஒரு தனி அளவுகோல் இருக்கின்றது. எனவே, ஊராட்சி ஒன்றியச்சாலைகளுக்கென்று இருக்கின்ற அளவுகோல்களின் அடிப்படையில் அந்தச்சாலைகள் மேம்படுத்தப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். உறுப்பினர் கோரியுள்ள அவருடைய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்து, எந்தெந்தச்சாலைகளை உனடியாக எடுத்துச்செய்ய வேண்டுமோ, அந்தச்சாலைகள் முழுவதும் உடனடியாக எடுத்துச்செய்யப்படும்.

எனென்று சொன்னால், இந்த நிதியாண்டிலேயே கிட்டத்தட்ட 9,235 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் 1,448 கோடி ரூபாய்ச்செலவில் மேம்படுத்தப்பட வேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அதனடிப்படையிலே மிகவும் பழுதுபட்ட சாலைகளை உடனடியாக எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையிலே உறுப்பினர் தொகுதியிலே உள்ள அந்தச்சாலைகைக் கண்டறிந்து. அவை எடுத்துக்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்