முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ. மேலிடத்துக்கு நெருக்கடி

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 24 - சுரங்க ஊழலில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவால் பாரதிய ஜனதாவுக்கு தலைவலி மேலும் அதிகரித்துள்ளது. எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கும்படி கட்சி மேலிடத்துக்கு நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  தென் இந்தியாவில் பாரதிய ஜனதா காலூன்றுவதற்கு முக்கிய பங்கு வகித்தவர் முதல்வர் எடியூரப்பா. தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. ஆனால் அவர் முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி கட்சி மேலிடத்திற்கு பெரும் சிக்கலையும் தலைவலியையும் ஏற்படுத்தி வருகிறார். முதலில் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட பிரதமருடன் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த அமைச்சர்களை அழைத்து செல்லாமல் ஒரு பெண் அமைச்சரை உடன் அழைத்து சென்றார். இதனால் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக அவரது அமைச்சரவையில் உள்ள ரெட்டி சகோதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எடியூரப்பா பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. கடைசியில் கட்சி மேலிடம் தலையிட்டு சமாதானம் செய்தது. இதில் முதல் தடவையாக எடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்பியது. அதனை அடுத்து பாரதிய ஜனதா மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 24 பேர் எடியூரப்பாவுக்கு எதிராக கிளம்பினர். இதனால் அவர் மெஜாரிட்டி எடியூரப்பா மெஜாரிட்டி பலத்தை இழந்தார். சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் அந்த 24 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளாததால் எடியூரப்பா பதவி இரண்டாவது தடவையாக தப்பியது. அடுத்து பெங்களூர் மற்றும் பல இடங்களில் தனது உறவினர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததாக எடியூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு தொடர கவர்னர் பரத்வாஜ் அனுமதி அளித்தார். மேலும் கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் எடியூரப்பா அரசை நீக்கிவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை அனுப்பினார். பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து முறையிட்டதால் எடியூரப்பாவின் பதவி 3-வது முறையாக தப்பியது. தற்போது எடியூரப்பா மீது சுரங்க ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. இது விசாரித்து அறிக்கை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு கசிந்து விட்டது. அதில் சட்ட விரோத சுரங்க நிறுவனங்களில் இருந்து எடியூரப்பா லஞ்சம் பெற்றதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் எடியூரப்பாவின் பதவிக்கு நெடுங்கண்டம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் கட்சி மேலிடத்திற்கு அந்த கட்சி தலைவர்களே கோரிக்கை விடுத்து வருகின்றனர். எடியூரப்பாவுக்கு கருணை காட்ட வேண்டாம் என்றும் அவர்கள் கோரி வருகிறார்கள். அறிக்கை வெளியாகட்டும். அறிக்கையை பார்த்த பின்னர் நடவடிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும் என்று கட்சி மேலிடம் கூறினாலும் எடியூரப்பாவுக்கு எதிராக தலைவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இதனால் பாரதிய ஜனதாவுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. மேலும் எடியூரப்பாவால் தார்மீக அடிப்படையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அளவில் ஊழலுக்கு எதிராக பாரதிய ஜனதா போராடி வருகிறது. ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு, லஞ்சம் மற்றும் கறுப்பு பணம் ஒழிப்பு ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா குரல் கொடுத்துக்கொண்டியிருக்கிற நேரத்தில் எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதோடு காங்கிரஸ் கட்சியின் கையில் ஒரு ஆயுதம் கிடைக்க செய்துவிட்டது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுள்ள பாரதிய ஜனதா லோக்ஆயுக்தா அறிக்கை வெளியாகட்டும் அதை நன்கு ஆய்வு செய்த பின்னர் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எடியூரப்பா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் அவருக்குள்ள செல்வாக்கு குறித்தும் கட்சி கருத்தில் கொண்டுள்ளதாக தெரிகிறது. கட்சி எம்.எல்.ஏ.க்களில் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதோடு கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்காயத் பிரிவு மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கிறது. எடியூரப்பாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆனந்த குமாரை முதல்வராக்கலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. இதற்கு எடியூரப்பா சம்மதிக்காவிட்டால் கர்நாடகத்தில் கட்சியின் வளர்ச்சி பாதிக்கும். அதனால் அரசை கலைத்துவிட்டு இடைத்தேர்தலுக்கு உத்தரவிடுவது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் லோக்ஆயுக்தா அறிக்கையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு எத்தகைய தன்மையுடையது என்பதையும் ஆராய்ந்த பின்னரே எடியூரப்பா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையில் எடியூரப்பாவை டெல்லி வரும்படி பா.ஜ. மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அவர் நாளை டெல்லி சென்று கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து தன் மீது அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்