முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டு வீரர்கள் 15 பேருக்கு முதலமைச்சர் விருது

சனிக்கிழமை, 28 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.28 - தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீரங்கனைகள் 15 பேருக்கு முதலமைச்சர் விருதை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கான முதலமைச்சர் விருதாக, தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும்,  காமன்வெல்த் ஓப்பன் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு சிறப்பு பரிசாக 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கினார்.

தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி / இயக்குநர் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் விருதாக 1 லட்சம் ரூபாய்க்கான பரிசுத்தொகையினை வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச மற்றும் தேசிய அளவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சாதனை புரிந்து நமது மாநிலத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் / ஆசிரியர்கள் ஆகியோர் முதலமைச்சர் விருது பெற தகுதியுடையவர் ஆவார்கள்.

இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தினை வளர்த்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் அவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு செயல் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருவதுடன், அவர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தியும் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

2006 -​2007​ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான முதலமைச்சர் விருது சதுரங்கம் விளையாட்டிற்கு மகேஷ் சந்திரன் பஞ்சநாதன், வளைகோல்பந்து விளையாட்டிற்கு வி.ராஜா, பளுதூக்குதல் விளையாட்டிற்கு சபீனா பானு மற்றும் நீச்சல் விளையாட்டிற்கு ஆர். ஐஸ்வர்யா ஆகியோருக்கும்; 2007​2008​ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான முதலமைச்சர் விருது பளுதூக்குதல் விளையாட்டிற்கு ஜி. வீரபத்ரன், தடகளம் விளையாட்டிற்கு பி. பிரான்சிஸ் சகாயராஜ், ஸ்குவாஷ் விளையாட்டிற்க்காக ஜோஸ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பால்லிக்கல் ஆகியோருக்கும்; 2008​2009​ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான முதலமைச்சர் விருது நீச்சல் விளையாட்டிற்கு ஜெ. அக்னீஸ்வர், பளுதூக்குதல் விளையாட்டிற்கு வி.ஆர். லட்சுமணன் குமார், நீச்சல் விளையாட்டிற்கு எம்.எ. வெண்பா மற்றும் யோகாசனம் விளையாட்டிற்கு உபாசன உபாதியாய் ஆகியோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொண்ட முதலமைச்சர் விருதுகளை,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கி, வாழ்த்தினார். 

அதேபோன்று, 2008 -​2009​ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த பயிற்றுநர்களுக்கான முதலமைச்சர் விருதினை கையுந்து பயிற்றுநர் பி.சுவாமிநாதன் மற்றும் தடகள பயிற்றுநர் எம்.வி. ராஜசேகர் ஆகியோருக்கும்; தலைசிறந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கான முதலமைச்சர் விருதினை பாளையங்கோட்டை, தூய சவேரியர் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இ.சேவியர் ரோச் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தூய ஜான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி, உடற்கல்வி ஆசிரியை லூர்துமேரி ஆகியோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொண்ட முதலமைச்சர் விருதுகளை,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டினார்கள்.  மேலும், 2010​ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் ஓப்பன் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றமைக்காக சதுரங்க வீரர் கிராண்ட் மாஸ்டர் ஆர்.ஆர். லட்சுமணுக்கு சிறப்புப் பரிசாக 5 லட்சம் ரூபாயை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கி கெளரவித்தார். முதலமைச்சரிடம் இருந்து விருதுகளை பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் தங்களை ஊக்குவிக்கும் விதத்தில் விருதுகளையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சாரங்கி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி.ஏ.ராஜ்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்