முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் - சத்தியமூர்த்தி சிலைகள் திறப்பு

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை.அக்.2 - சத்தியமூர்த்தி பவனில் காமராஜர்-சத்தியமூர்த்தி ஆகியோரின் சிலைகள் திறக்கப்பட்டது. இதில் கேரளா முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலையும், விடுதலை வீரர் சத்தியமூர்த்தியின் மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

காமராஜர், சத்தியமூர்த்தி சிலைகள் திறப்பு விழா மற்றும் ராஜீவ்காந்தி அரங்கம் திறப்பு விழா நேற்று முன்தினம்மாலை கட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தலைமை தாங்கினார்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், வி.நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன் மற்றும் விஜயதாரணி எம்.எல்.ஏ., முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கேரள மாநில முதல்வர்உம்மன்சாண்டி, பெருந்தலைவர் காமராஜர் சிலையை திறந்துவைத்தார். பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சத்தியமூர்த்தி சிலையை திறந்துவைத்தார். ராஜீவ்காந்தி பெயர் பலகையை குமரி அனந்தன் திறந்து வைத்தார்.

விழாவில், கேரளா மாநில முதல்வர் உம்மன்சாண்டி பேசியதாவது:-

பெருந்தலைவர் காமராஜர் அரசியல் வானில் ‘கிங் மேக்கர்’ ஆக விளங்கினார். உண்மையான, சிறந்த தலைவர். அனைத்து தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்குபவர். கேரளா-தமிழகத்துக்கு இடையே நல்ல உறவை வளர்த்தவர். பொதுவாழ்வில் எளிய வாழ்வை வாழ்ந்தவர். அந்தவகையில் அவர் சிலையை திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இலவச கல்வி, மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர்.இன்று அரசியலுக்கு வருபவர்கள் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்திருக்கிறது. இதற்கு எந்த தனிநபரையும் குற்றம் சாட்டக்கூடாது. கட்சியை பலப்படுத்த நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் தோல்வியில் இருந்து மீண்டு எழும்.

மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அண்டை மாநிலங்களும் அமல்படுத்தும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசியதாவது:-

இன்றைக்கு குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள், ஆனால் வளர்ச்சிக்கான மாதிரியை காமராஜர் அன்றைக்கே தமிழகத்தில் உருவாக்கி காட்டியவர். மத்திய காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஏராளமான பள்ளிகளை உருவாக்கி இருக்கிறோம். உணவு பாதுகாப்பு சட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்திருக்கிறோம்.

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை எதிர்த்த பா.ஜ.க., தற்போது எங்கள் திட்டங்களைதான் செயல்படுத்துகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. ஆனால் இதை அவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். மங்கள்யான் உள்பட அனைத்து திட்டங்களின் வெற்றிக்கும் காங்கிரஸ்தான் காரணம். இதை யாரும் பங்குபோட முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை காட்டிலும் காங்கிரஸ் கட்சி கட்டுகோப்புடன் விளங்குகிறது. இங்கே கூடியிருக்கும் கூட்டம் இன்றைய அரசியல் சூழலுக்கேற்ப எதையும் செய்யும் கூட்டம். பெருந்தலைவருக்காக கூடிய கூட்டம். காங்கிரஸ் கட்சியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதற்காக இந்த நாளில் நாம் உறுதியேற்க வேண்டும். வெறும் உதட்டளவில் மட்டும் ஒற்றுமையை காட்டாமல், முழு உணர்வுடன் நாம் உறுதி ஏற்க வேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு நாம் உழைக்க வேண்டும். மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் காமராஜரின் ஆட்சியை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் பேசும்போது, ‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று கொண்டதில் இருந்து நான் ஒரு நீதிபதியை போல் செயல்பட்டு கொண்டு இருக்கிறேன். நாளை விடிவது நமக்கே என்று எண்ணி ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் உழைத்தால், காமராஜர் ஆட்சியை நம்மால் அமைக்க முடியும்’ என்றார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா நிறைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் கோவை தங்கம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்