முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்புதலுடன் நடந்த உறவா? அக்பருக்கு பத்திரிகையாளர் பல்லவி கோகோய் கண்டனம்

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,கட்டாயப்படுத்தி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நடந்தது பாலியல் பலாத்காரம் தான். ஒப்புதலுடன் வைத்துக் கொண்ட உறவு அல்ல என முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு பத்திரிகையாளர் பல்லவி கோகோய் பதிலளித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார்களைத் தெரிவித்தனர். இதையடுத்து எம்.ஜே. அக்பர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இதுபோலவே தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பெண் பத்திரிக்கையாளரான பல்லவி கோகோய், 23 வயதில் தான், அக்பருடன் இணைந்து பணியாற்றிய போது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கூறினார். அது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரை வெளியானது.

இதனை மறுத்து, எம்.ஜே. அக்பர் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக பல்லவி கோகோய் நேற்று விளக்கம்அளித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  கூறியுள்ளதாவது:-எம்.ஜே. அக்பரால் உடல் ரீதியாக, வார்த்தைகளால், பாலியல் ரீதியாக எனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களை தான் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பதிவு செய்தேன். ஒரு பத்திரிகையாளராக வேண்டும், பத்திரிகையில் பணிபுரிய வேண்டும் என்ற ஏக்கத்துடன் வந்த 20 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியுள்ளேன்.

பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய ஒருவர் எனக்கும், என்னை போன்ற இளம் பெண்களும் எங்களுக்கு நடந்த தீங்கை தைரியத்துடன் வெளியுலகிற்கு சொல்லி வருகிறோம். ஒப்புதலுடன் தான் உறவு வைத்துக் கொண்டாக எம்.ஜே. அக்பர் கூறியுள்ளது பெண்களை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்யும் வெளியுலகுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் சொல்வது போல் உள்ளது.கட்டாயப்படுத்தி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நடந்தது பாலியல் பலாத்காரமே, ஒப்புதலுடன் வைத்துக் கொண்ட உறவு அல்ல. எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் உண்மையானவை. என்னை போலவே அவரால் பாதிக்கப்பட்ட பிற பெண்களும் இதனை ஒப்புக் கொள்வார்கள், தங்களுக்கு நேர்ந்த துன்பத்தை, உண்மையை தைரியத்துடன் சொல்ல முன் வருவார்கள். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து