முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழுக்காக அ.தி.மு.க ஆற்றிய சேவை 100 சதவீதம்: தி.மு.க செய்தது பத்து சதவீதம் தான்: ஜெயக்குமார்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தமிழுக்காக அ.தி.மு.க ஆற்றிய சேவை 100 சதவீதம் என்றால் திமுக செய்த பணி 10 சதவீதம் தான் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

தமிழ் எங்கும் எதிலும் ஒலித்திட பல்வேறு சாதனைகளைப் புரிந்தது அ.தி.மு.க அரசு. இதனை வரலாறு பேசும். இந்த வரலாற்றை யாராலும் மறைத்துவிட முடியாது. விளம்பரத்திற்காக ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழுக்காக நாங்கள்100 சதவீதம் பணி செய்தால், தி.மு.க 10 சதவீத பணியைத்தான் மேற்கொண்டிருக்கும். 10 சதவீதத்தை செய்துவிட்டு, தமிழுக்கு நல்லது செய்திருக்கிறோம் என தி.மு.க சொன்னால், மக்கள் அதனை நம்பத் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சமஸ்கிருதத்தை விட தமிழ் மூத்த மொழி எனக்கூறிய பிரதமர் மோடியை தமிழக மக்கள் ஆண்டு முழுவதும் கொண்டாடியிருக்க வேண்டும் எனவும், ஆனால், தமிழக மக்கள் நன்றி மறந்தவர்கள் எனவும் முன்னாள் மத்திய இணையமைச்சர் கூறிய கருத்துக் குறித்து, அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான். அந்தக் கொள்கையிலிருந்து தமிழகம் எப்போதும் மாறாது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட இருமொழிக் கொள்கை, இன்றும் அ.தி.மு.க ஆட்சியால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து