முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ரூ. 675 கோடி

சனிக்கிழமை, 15 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 675.19 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.129.82 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. 

பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம்.  பொங்கலுக்கு மறுநாள்  திருவள்ளூவர் தினம் கடைபிடிக்கப்படுவதால் மதுக்கடைகள் மூடப்படும். இந்த ஆண்டு பொது ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படுவதால் தொடர்ச்சியாக 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. 2 நாட்கள் கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் அதிக அளவு மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். 

இதனால் நேற்று முன்தினம் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பகல் நேரத்தை விட இரவில் அதிகளவில் குவிந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி உற்சாகமாக மது அருந்தியவர்கள் பலர் 2 நாட்களுக்கு தேவையான மதுவகைகளை வாங்கி சென்றனர்.

இருசக்கரம் மற்றும் கார் போன்ற வாகனங்களில் சென்று மதுபானங்களை மொத்தமாக வாங்கினார்கள். இரவு 10 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டதால் அதற்கு முன்னதாக மது பிரியர்கள் குவிந்ததால் ஒருசில கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  கூட்டம் அதிகமாக இருந்த கடைகளில் பாதுகாப்பிற்கு போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு உள்ளன. 12-ம் தேதி ரூ.155.6 கோடிக்கும், 13-ம் தேதி ரூ.203.5 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 675.19 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.129.82 கோடிக்கு மது விற்பனை ஆனது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சென்னையில் ரூ.59.28 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.65.52 கோடிக்கும், சேலம் ரூ.63.87 கோடிக்கும், கோவை ரூ.59.65 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் நேற்று முன்தினம் ரூ.68.76 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து