முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதன்கிழமை, 22 மார்ச் 2023      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை கிராமத்தில், வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிவிப்பில், 

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், ஓரிக்கை கிராமப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் நேற்று (22.3.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் பூபதி (57), முருகன் (40), சசிகலா (35), தேவி (32), சுதர்சன் (31), வித்யா (30) மற்றும் அடையாளம் காணமுடியாத மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் கடும் காயமடைந்து உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும்,  கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து