முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக் கொலை: சேலம் நீதிமன்றத்தில் மேலும் இருவர் சரண்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      தமிழகம்
0

Source: provided

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் நேற்று (23-ம் தேதி) சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி ஜெகன் (25). இவர் அவதானப்பட்டியை அடுத்த புழுக்கான் கொட்டாயை சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா(21) காதலித்து வந்தார். இருவரும் உறவினர்கள். இந்த காதலுக்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை மீறி சரண்யா கடந்த ஜனவரி 26-ம் தேதி ஜெகனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி அவரது மாமனார் சங்கர் (43) உட்பட சிலர் சேர்ந்து கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலையில் ஜெகனை வெட்டிக் கொலை செய்தனர்.

இக்கொலை தொடர்பாக சங்கர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அன்றைய தினமே சரண் அடைந்தார். இதனிடையே கடந்த 21-ம் தேதி இரவு, புழுக்கான் கொட்டாய் கிராமத்திற்கு சென்ற ஜெகனின் உறவினர்கள், நண்பர்கள், சங்கரின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட ஜெகனின் சடலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் (22-ம் தேதி) உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது, கொலையாளிகள் கைது செய்தால் மட்டுமே உடலைப் பெறுவோம் என கூறி ஜெகனின் உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர். பின்னர் ஜெகனின் உடலை பெற்று சென்ற உறவினர்கள் தகனம் செய்தனர்.

இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய எஸ்.பி சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தமிழரசி, இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று இக்கொலையில் தொடர்புடைய பில்லன குப்பத்தை சேர்ந்த கரியன் (எ) முரளி (20), நல்லூரை சேர்ந்த நாகராஜ் (21) ஆகிய இருவரும் சேலம் நீதிமன்றம் எண்:4-ல் நீதிபதி யுவராஜ் முன்னிலையில் சரண் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து